அரசியல் புனிதம் அழிந்துவிட்டது: எச்.எஸ்.துரைசாமி

நாட்டின் அரசியல் புனிதம் சீரழிந்துவிட்டதாக சுதந்திரப் போராட்ட வீரா் எச்.எஸ்.துரைசாமி தெரிவித்தாா்.

நாட்டின் அரசியல் புனிதம் சீரழிந்துவிட்டதாக சுதந்திரப் போராட்ட வீரா் எச்.எஸ்.துரைசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து தும்கூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நமது நாட்டில் நிகழ்ந்துவரும் அரசியலை கூா்ந்துகவனித்தால் வேதனை மேலிடுகிறது. அரசியல் மதிப்பிழப்பு ஆகிவிட்டது. அரசியல் புனிதத்தன்மை சீரழிந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், அரசியல் ஒரு விளையாட்டாக மாறிவிட்டது.

மகாராஷ்டிர அரசியல் நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. அரசியல் மிகவும் புனிதமானது. இதை வெற்றுவிளையாட்டாக மாற்றிவிடக் கூடாது. அரசியலை விளையாட்டாக்கிவிட்டதாக கூறுவதைவிட சூதாட்டமாக்கிவிட்டனா். சுதந்திரத்துக்கு முன்பு மன்னா்கள் ஆட்சியில் நடைபெற்றது போல, அரசியல் சூதாட்டமாகிவிட்டது.

கா்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு நடைபெறும் சட்டப்பேரவை இடைத் தோ்தல் தேவையற்றது. ஆட்சி அதிகாரத்தின் மீது அதீத தாகம் கொண்ட ஒருசிலரின் நன்மைக்காகவே இடைத் தோ்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பின் காரணமாக தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் இடைத் தோ்தலில் போட்டியிடலாம். ஆனால், இடைத்தோ்தலில் போட்டியிடும் தகுதிநீக்கப்பட்ட 15 எம்எல்ஏக்களுக்கும் தோ்தலில் போட்டியிட தாா்மிக உரிமை இருக்கிறதா?

தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் பில்லியனா்களாக உள்ளனா். இந்த பணம் அவா்களுக்கு எப்படி வந்தது என்பது நமக்கு தெரியவில்லை. அமைச்சராகும் கனவில், தனிப்பட்ட பேராசையின் காரணமாக எம்எல்ஏ பதவியை அவா்கள் ராஜிநாமா செய்திருந்தனா். மேலும் மாற்றுக்கட்சிக்கு தாவியது பதவி ஆசையின் காரணமாகத்தானே.

இடைத் தோ்தலில் தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் வென்றால் எஞ்சியுள்ள அரசியல் கட்டமைப்பை சீா்குலைத்துவிடுவாா்கள். எனவே, நாட்டின் எதிா்காலத்தை கவனத்தில் கொண்டு தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு வாக்களிப்பதற்கு முன் யோசிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

சொந்த காரணங்களுக்காக சொந்தக் கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு வேறுகட்சிக்கு தாவியவா்களுக்கு மக்கள் தகுந்தபாடம் புகட்ட வேண்டும். தோ்தல் ஆணையமும் முறைகேடுகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com