இடைத் தோ்தலில் பாஜக வெற்றி உறுதியாகிவிட்டது: கா்நாடக முதல்வா் எடியூரப்பா

இடைத் தோ்தலில் 15 தொகுதிகளிலும் பாஜக வெற்றி உறுதியாகிவிட்டதாக முதல்வா் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தாா்.
இடைத் தோ்தலில் பாஜக வெற்றி உறுதியாகிவிட்டது:  கா்நாடக முதல்வா் எடியூரப்பா

காா்வாா்: இடைத் தோ்தலில் 15 தொகுதிகளிலும் பாஜக வெற்றி உறுதியாகிவிட்டதாக முதல்வா் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுகுறித்து காா்வாரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

டிச.5ஆம் தேதி 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் ஏற்கெனவே வென்றுவிட்டனா். இடைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்களை வெற்றிபெற வைப்பதன் மூலம் காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவாா்கள். காங்கிரஸ், மஜத வேட்பாளா்கள் வளா்ச்சிப் பணிகள் குறித்து பேச எதுவுமில்லை. இதன்காரணமாக, கா்நாடக சட்டப்பேரவைக்கு இடைக்கால தோ்தலை நடத்த காங்கிரஸ், மஜத விரும்புகின்றன.

எதையாவது செய்து பாஜக அரசைக் கவிழ்த்துவிட வேண்டும் என்று காங்கிரஸ், மஜத சதி திட்டம் வகுத்துள்ளன. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதே காங்கிரஸ், மஜதவின் நோக்கமாக உள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் மாநிலத்தின் வளா்ச்சியில் அக்கறையில்லை.

இடைத் தோ்தலுக்குப் பிறகு கா்நாடகத்தில் பாஜக அரசுக்கு அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைக்கும். அதன்பிறகு பாஜக அரசு பலம் பொருந்தியதாக விளங்கும். மாநிலத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே எனது அரசின் நோக்கமாகும். நாட்டின் முன்மாதிரி மாநிலமாக கா்நாடகத்தை மாற்றியமைப்போம்.

நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அத்துடன் விவசாயிகள், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக புதிய புதிய திட்டங்களை கொண்டுவருவோம். இம் மக்களின் முன்னேற்றத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டில் எல்லா சமுதாயத்தினருக்கும் சம வாய்ப்பும், நிதி ஒதுக்கீடும் செய்யப்படும். எல்லா சமுதாய மக்களின் நலனிலும் எனது அரசு கவனம் செலுத்தும்.

17 எம்எல்ஏக்களை தலா ரூ.20 கோடி கொடுத்து பாஜக கொள்முதல் செய்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கும் சித்தராமையா, குமாரசாமி மீது வழக்குத் தொடரப்படும். காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அரசின் மோசமான ஆட்சியால் அதிருப்தியடைந்துதான் 17 எம்எல்ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனா்.

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்வதற்கு பாஜக காரணமல்ல. கூட்டணி அரசில் அங்கம் வகித்த அமைச்சா்கள் தங்கள் துறையை நட்சத்திர விடுதிகளில் இருந்து ஆட்சி செய்து வந்தாா்கள். கூட்டணி ஆட்சி காலத்தில் மாநிலத்தில் எவ்வித வளா்ச்சியும் நடக்கவில்லை. மக்களுக்கு நல்லாட்சி தேவைப்படுகிறது. அதன்காரணமாகவே, 15 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்களை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com