Enable Javscript for better performance
கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப் பெருக்கு:  வட கர்நாடகத்தில் வெள்ள அபாயம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப் பெருக்கு:  வட கர்நாடகத்தில் வெள்ள அபாயம்

    By DIN  |   Published on : 09th October 2019 10:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அதை சுற்றியுள்ள வட கர்நாடகத்தில் வெள்ள அபாயம் காணப்படுகிறது.
    கடந்த ஆகஸ்ட் 1 முதல் 15-ஆம் தேதி வரை வட கர்நாடகத்தில் பெய்த கன மழை, கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்தது. இதனால்,  பெலகாவி, பாகல்கோட், யாதகிரி, கதக் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டதால், அப்பகுதிகள் நீரில் மூழ்கின. இதில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். மேலும் பாலங்கள், கட்டுமானங்கள் இடிந்துவிழுந்தன. 
    இந்த நிலையில், கடந்தசில நாள்களாக வடகர்நாடகத்தில் தீவிரமழை பெய்துவருவதாலும், மகாராஷ்டிரத்தில் கனமழை பெய்து அங்குள்ள கொய்னா அணையில் இருந்து அளவுக்கதிமாக தண்ணீர் திறந்துவிட்டுள்ளதால் கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 
    இதனால் கிருஷ்ணா ஆற்றின் கிளை ஆறுகளான மலபிரபா, கட்டபிரபா, வேத்கங்கா, தூத் கங்கா, ஹிரன்யகேஷியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பெலகாவி, பாகல்கோட், யாதகிரி, கதக் மாவட்டங்களில் மீண்டும் வெள்ளச்சூழல் காணப்படுகிறது. கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாராயணபுரா அணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 
    இதனால் ஒருசில பாலங்கள், ஏரிகள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக கர்நாடகமாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் இயக்குநர் ஜி.எஸ்.சீனிவாஸ்ரெட்டி தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் மேலும் கூறியது:-
    கடந்த மாதத்தைப் போலவே இப்போதும் வெள்ளத்தின் தீவிரம் அமைந்திருந்தும். இந்த முறை ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிலும் மனித உயிர்கள், கால்நடைகள், வீடுகள், உள்கட்டமைப்புகள், பயிர்களுக்குச் சேதம் உருவாகும். ராஜாபூர்,  கல்லோல் தடுப்பணைகளில் இருந்து விநாடிக்கு 1.52 லட்சம் கன அடி தண்ணீரும், அல்மாட்டி அணையில் இருந்து விநாடிக்கு 1.8 லட்சம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. 
    கிருஷ்ணா ஆற்றின் நீர்வரத்து பெருகியுள்ளதால், அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர்வரத்தை கூர்ந்துகவனித்துவருகிறோம். இந்த அணைகளில் நீர்வரத்து விநாடிக்கு 1.65 லட்சம் கன அடியாகவும், வெளியேற்றம் 2.3 லட்சம் கன அடியாகவும் உள்ளது என்றார் சீனிவாஸ் ரெட்டி.
    கர்நாடகம் முழுவதும் கடந்தமாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் 22 மாவட்டங்களை சேர்ந்த 103 வட்டங்கள் பாதிக்கப்பட்டன. 7.5 லட்சம் ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கி பயிர்கள் நாசமானது. 82 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக 493 மறுவாழ்வுமையங்கள் செயல்பட்டுவருகின்றன. இதில் 2.10 லட்சம் மக்கள் தங்கியுள்ளனர். வெள்ளநிவாரணப்பணிகள் முழுமையாக சென்றடையாதநிலையில், வடகர்நாடகத்தில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது அதிர்ச்சியில் உள்ளனர். இவர்களைப் பாதுகாக்க கர்நாடக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai