வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய நகர்வலம்: முதல்வர் எடியூரப்பா

வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக 2 வாரங்களுக்கு ஒருமுறை பெங்களூரில் நகர்வலம்

வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக 2 வாரங்களுக்கு ஒருமுறை பெங்களூரில் நகர்வலம் நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக பெங்களூரு கிருஷ்ணா அரசினர் இல்லத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை முதல்வர் எடியூரப்பா நகர்வலம் புறப்பட்டு சென்றார். 
அப்போது, பன்னர்கட்டா சாலை, பட்டு வாரியச் சாலை, காடுபீசனஹள்ளி,  மாரத்தஹள்ளி,  டின் பேக்டரி, ஹெப்பாள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் பணிகளை ஆய்வுசெய்தார்.  பின்னர், வெளிவட்டசாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து,  நகர்வலத்தின் நிறைவில் எடியூரப்பா செய்தியாளர்களிடம்கூறியது:-
பன்னர்கட்டா சாலை, ஜெயதேவா மருத்துவமனை சந்திப்பில் மெட்ரோ ரயில்,  சாலை மேம்பாட்டு பணி நடைபெற்றுவருவதை ஆய்வுசெய்தேன். 2021-ஆம் ஆண்டுக்குள் எலெக்ட்ரானிக் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை முடிக்குமாறு அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். 
மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களில் சாலை,  நடைபாதையின் நிலையை மேம்படுத்துமாறு கூறியுள்ளேன். இந்தப் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.  
பட்டு வாரியச் சந்திப்பில் நடைபெற்றுவரும் மெட்ரோ, சாலை, 2 பேருந்துநிலையங்கள் அமைக்கும் பணியை ஆய்வுசெய்தேன். இப்பணியை விரைந்து முடிக்குமாறு கூறியிருக்கிறேன். அதன்பிறகு, ஒயிட்பீல்டு, கே.ஆர்.புரம் பகுதியில் நடைபெற்றுவரும் வெளிவட்டசாலைபணியை ஆய்வுசெய்தேன். இங்கு மெட்ரோ ரயில்தடம், மேம்பாலம், 6 வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணியையும் 2021-ஆம் ஆண்டுக்குள் முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன். ஹெப்பாள் சந்திப்பில் 5 வழிச்சாலை கட்டுவது குறித்து ஆராய்ந்தேன். அங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்கப்பாதை அமைப்பது குறித்தும் கேட்டறிந்தேன். அடுத்த 3 மாதங்களுக்குள் இதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். குந்தலஹள்ளியில் சுரங்கப்பாதை கட்டப்படவுள்ளது. இப்பணியை ஆய்வுசெய்தேன். 
வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வுசெய்வதற்காக 2 வாரங்களுக்கு ஒருமுறை பெங்களூரில் நகர்வலம் நடத்தத் திட்டமிடுள்ளேன். பெங்களூரை உலக தரத்திலான மாநகரமாக உயர்த்துவதே அரசின் நோக்கம். அந்த இலக்கை அடைய கடுமையாக உழைப்போம் என்றார் அவர்.
ஆய்வின்போது, துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயணா, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோக்,  காவல் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, பெங்களூரு மேயர் கங்காம்பிகே, எம்பி பி.சி.மோகன், எம்எல்ஏக்கள் அரவிந்த் லிம்பாவளி, எஸ்.ரகு, சதீஷ்ரெட்டி, முதல்வரின் ஆலோசகர் எம்.லட்சுமிநாராயணா, பெங்களூரு மெட்ரோ ரயில் கழக மேலாண் இயக்குநர் அஜய்சேத்,  பெங்களூரு மாநகராட்சி ஆணையர் பி.எச்.அனில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com