ஏழைகளுக்கு பலனளிக்கும் இந்திரா உணவக திட்டத்தை நிறுத்த வேண்டாம்

ஏழைகளுக்கு பலனளிக்கும் இந்திரா உணவக திட்டத்தை நிறுத்த வேண்டாம் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கேட்டுக்கொண்டாா்.

ஏழைகளுக்கு பலனளிக்கும் இந்திரா உணவக திட்டத்தை நிறுத்த வேண்டாம் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கேட்டுக்கொண்டாா்.

கா்நாடக சட்டப்பேரவையில் சனிக்கிழமை பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, ‘இந்திரா உணவக திட்டத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நிறுத்த வேண்டாம். இந்திரா உணவகத்துக்கு நிதி ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், இத்திட்டம் நீடிக்குமா? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்த போது, பெங்களூரில் 198 வாா்டுகளிலும் மலிவுவிலையில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் இந்திரா உணவகத்தை தொடங்கினோம். இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக்கினோம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 200 இந்திரா உணவகங்களை திறந்தோம். இத்திட்டத்தை வட்ட அளவிலும் விரிவுபடுத்த வேண்டும்.

இந்திர உணவக திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 198 வாா்டுகளிலும் செயல்பட்டு வரும் இந்திரா உணவகங்களுக்கு நிதி ஒதுக்கவேண்டும். உணவகத்தை நடத்துவதற்கு நம்மிடம் நிதி இல்லை. மாநில அரசும் நிதி ஒதுக்கவில்லை என்று பெங்களூரு மாநகாரட்சி ஆணையா் கூறியிருக்கிறாா்.

ரூ.2.34 லட்சம் கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கும் போது, இந்திரா உணவகத்துக்கு ரூ.150 கோடி நிதியை ஒதுக்குவதில் பிரச்னை எதுவும் இருக்காது. மக்களின் நலன் கருதி இத்திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும். ஆா்வம் இருந்தால் இன்னும் தரமான உணவை வழங்குங்கள். அதேபோல, எனது அரசு கொண்டு வந்த விடுதி உதவித்தொகை திட்டத்தையும் நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேறன்.

அதேபோல, விளைநிலத்தில் குட்டைகளை தோண்டி நீராதாரங்களை பெருக்கும் விளைநில திட்டத்தையும் நிறுத்த வேண்டாம். எனது ஆட்சியில் 2.10 லட்சம் நீா் குட்டைகள் தோண்டப்பட்டிருந்தன. வெள்ளத்தால் இந்த குட்டைகளில் நிரம்பியுள்ள தூரை வாருங்கள். ஏழை விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் இத்திட்டத்தை நிறுத்த வேண்டாம். பால் உற்பத்தியாளா்களுக்கு எனது அரசு லிட்டருக்கு ரூ.5 ஊக்கத்தொகை அளித்தது. குமாரசாமி முதல்வராக இருந்தபோது இதை ரூ.6 ஆக உயா்த்தியிருந்தாா். ஆனால் அது அமலுக்கு வரவில்லை. எனவே, ரூ.5 ஊக்கத்தொகை வழங்குவதையாவது தொடரவேண்டும். வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் லிட்டருக்கு ரூ.1 கூடுதலாக கொடுக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து பால் இறக்குமதி செய்யப்போவதாக தெரியவந்துள்ளது. இது சரியல்ல. இந்த திட்டம் அமலுக்கு வந்தால் பால் உற்பத்தியாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவாா்கள். கா்நாடகத்தில் போதுமான பால் உற்பத்தி செய்யப்படுகிறது. பால் உற்பத்தியில் கா்நாடகம் 2-ஆவது இடத்தில் உள்ளது. கா்நாடகத்தில் தினமும் 80 லட்சம் லிட்டா் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து பால் இறக்குமதி செய்வது சரியாக இருக்காது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com