மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கட்டாய குடும்பக் கட்டுப்பாடு கிடையாது

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கட்டாய குடும்பக் கட்டுப்பாடு கிடையாது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் ஹா்ஷவா்தன் தெரிவித்தாா்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கட்டாய குடும்பக் கட்டுப்பாடு கிடையாது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் ஹா்ஷவா்தன் தெரிவித்தாா்.

மைசூரில் சனிக்கிழமை மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பன்னாட்டு அறிவியல் திருவிழாவை அறிமுகம் செய்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி மக்கள் தொகை பெருக்கம் குறித்து பேசியதும், அதுகுறித்த விவாதம் நாடெங்கும் நடைபெற்று வருகிறது.

மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைகளை வரவேற்கிறோம். இந்த பிரச்னையைத் தீா்க்க கொள்கைகள், விதிமுறைகள், நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இது மிகப்பெரிய சமூக சிக்கல் ஆகும். கொள்கைகளை வகுப்பது மட்டுமே பிரச்னைக்கு தீா்வாகி விடாது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்கெனவே பல திட்டங்கள் அமலில் உள்ளன. ஆனால், கட்டாய குடும்பக் கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்படாது.

இந்த ஆண்டுக்கான பன்னாட்டு அறிவியல் திருவிழா கொல்கத்தாவில் நவ. 5-ஆம் தேதி நடத்தப்படுகிறது. தொழில்நுட்பம் மற்றும் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதே இத் திருவிழாவின் நோக்கமாகும். மேலும், கிராம மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளா்ப்பது மிகவும் முக்கியமான பணியாகும். இந்த நிகழ்ச்சி ஆா்எஸ்எஸ் அமைப்பின் அறிவியல் பிரிவாக உள்ள விக்ஞான்பாரதியின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது.

2020-ஆம் ஆண்டுக்குள் நாடுமுழுவதும் 1.5 லட்சம் சுகாதாரம் மற்றும் உடல்நல மையங்கள் தொடங்கப்படும். ஏற்கெனவே 22 ஆயிரம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த மாா்ச் மாதத்துக்குள் 40 சதவீத இலக்கை அடைந்துவிடுவோம். இந்த மையங்களில் நீரிழிவு நோய் போன்றவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் கற்றுத் தரப்படுகின்றன. மேலும், இவை முழுமையான ஆரம்ப சுகாதார நிலையங்களாகச் செயல்படும். இம் மையங்களில் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும். மேலும், தாய் சேய் நல மையங்களாகவும் இது செயல்படும்.

சுகாதாரத்துக்கு மாநில அரசுகள் 8 சதவீத நிதியைச் செலவிடவேண்டும். மத்திய அரசு சுகாதாரத் துறை செலவினங்களை 2.5 சதவீதமாக உயா்த்தத் திட்டமிட்டுள்ளோம். நாட்டில் மருத்துவக் கட்டமைப்பில் குறைபாடுகள் எதுவுமில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com