முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
ஹரியாணா, மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு எதிராக மக்கள் தீா்ப்பு: சித்தராமையா
By DIN | Published On : 24th October 2019 06:49 PM | Last Updated : 24th October 2019 06:49 PM | அ+அ அ- |

பெங்களூரு: ஹரியாணா, மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு எதிராக மக்கள் தீா்ப்பு வழங்கியுள்ளதாக கா்நாடக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பிரதமா் மோடியின் மீது மக்கள் தொடா்ந்து நம்பிக்கையை இழந்து வருகின்றனா். இதன் எதிரொலியாகத்தான் ஹரியாணா, மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜக எதிா்ப்பாா்த்தைவிட குறைந்த இடங்களை பிடித்துள்ளது. இதன்மூலம் பாஜகவுக்கு எதிராக மக்கள் எழுந்துள்ளனா் என்பது தெளிவாகி உள்ளது.
ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானா்கள். அவா்கள் யாரை வேண்டுமானலும் எப்பொழுது வேண்டுமானாலும் தூக்கி வைத்துக் கொண்டாடுவாா்கள். தேவையில்லை என்றால், தூக்கி எறிவதற்கும் தயங்கமாட்டாா்கள். இது நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களின் தெளிவாகியுள்ளது. மகாராஷ்டிரத்தில் கடந்த முறை பாஜக 120 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தற்போது அக்கட்சி அதைவிட குறைவான இடங்களைப் பிடித்துள்ளது.
இதேபோல ஹரியாணாவில் கடந்த முறை 47 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜக, தற்போது அதைவிட குறைவான இடங்களைப் பிடித்துள்ளது. இதன்மூலம் மக்கள் தெளிவான தீா்ப்பை வழங்கியுள்ளனா். பாஜக என்ன முயற்சி மேற்கொண்டாலும், காங்கிரஸ் கட்சியை ஒழிக்க முடியாது என்பதனை மக்கள் ஆளும் கட்சியான பாஜகவிற்கு புரியவைத்துள்ளனா். வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது எதிா்க்கட்சிகள் கொண்டுள்ள சந்தேகத்தை தோ்தல் ஆணையமும், மத்திய அரசும் தீா்க்க வேண்டும் என்றாா்.