வெள்ள நிவாரணப் பணிகளில் பாஜக அரசு தோல்வி

கர்நாடகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளதாக, காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா தெரிவித்தார்.
வெள்ள நிவாரணப் பணிகளில் பாஜக அரசு தோல்வி

கர்நாடகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளதாக, காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா தெரிவித்தார்.
 இதுகுறித்து ஹுப்பள்ளியில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
 கர்நாடகத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு மக்கள் துன்பத்தில் உள்ள வரும் நிலையிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் மத்திய, மாநில பாஜக அரசுகள் தோல்வி அடைந்துள்ளன.
 மக்களின் துயர்துடைப்பதில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை செலுத்தாமல் அலட்சியமாக இருந்து வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடங்கப்பட்ட கஞ்சி மையங்களும் மூடப்பட்டுள்ளன.
 விளைபொருள்கள், வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்காமல் கர்நாடக அரசு இழுத்தடித்து வருகிறது. மக்களின் துன்பங்களுக்கு செவிசாய்த்து தீர்வு காண்பதற்கு யாருமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
 வெள்ளத்தில் வீடுகளை இழந்தோருக்கு தனித்தனியே கொட்டகைகளை அமைத்து தருமாறு கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், அதுபற்றியும் அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை.
 வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களை பார்ப்பதற்கும், துயரங்களைக் கேட்டறிவதற்கும் கர்நாடக பாஜக அரசுக்கு நேரம் இல்லை.
 மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால், அது அம்மாநிலத்தையொட்டியுள்ள கர்நாடகப் பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரம், கர்நாடக அரசுகளுக்கு இடையே சரியான புரிந்துணர்வு இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
 முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமல் கொய்னா அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் வட கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகள் மீண்டும் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையை முன்னெச்சரிக்கையுடன் கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 சிவக்குமார் கைது பழிவாங்கும் நடவடிக்கை: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். டி.கே.சிவக்குமார் விவகாரத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். இதை திட்டமிட்டு செயல்படுத்துவதே பாஜக தலைவர்கள்தான். டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸார் அமைதியான முறையில் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
 எந்தவித வன்முறை சம்பவங்களிலும் காங்கிரஸார் ஈடுபடவில்லை. ஆனால், காங்கிரஸுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் நோக்கில் ஒருசில சமூகவிரோதிகள் போராட்டத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com