பெங்களூரில் ஒக்கலிகர் சங்கத்தினர் பேரணி

முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, பெங்களூரில் புதன்கிழமை ஒக்கலிகர் சங்கத்தினர் பேரணி நடத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, பெங்களூரில் புதன்கிழமை ஒக்கலிகர் சங்கத்தினர் பேரணி நடத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 பணப் பதுக்கல் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வந்த மத்திய அரசின் அமலாக்க இயக்குநரகம், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரை செப்.3ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது.இதைத் தொடர்ந்து, டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம்தழுவிய போராட்டங்களில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.
 பெங்களூரு பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரியில் இருந்து காந்தி நகரில் உள்ள சுதந்திரப் பூங்கா வரையில் புதன்கிழமை ஒக்கலிகர் சமுதாய சங்கத்தினர் பேரணி நடத்தி, ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு 50க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள், சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.
 கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் 50க்கும் மேற்பட்ட ஒக்கலிகர் சங்கங்கள் போராட்டத்துக்கு கூட்டாக அழைப்புவிடுத்திருந்தன. பேரணியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
 காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, செலுவராயசாமி, நரேந்திரசாமி, முன்னாள் எம்பிக்கள் வி.எஸ்.உக்ரப்பா, ராஜீவ்கெளடா, எல்.ஆர்.சிவராமேகெளடா, எம்எல்ஏ செளம்யாரெட்டி, முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ணா, கர்நாடக ரக்ஷனா வேதிகே தலைவர் நாராயணகெளடா உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், ராமநகரம், ஹாசன், சிக்பளாப்பூர், மண்டியா, மைசூரு, சாமராஜ்நகர், தும்கூரு, சித்ரதுர்கா மாவட்டங்களை ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் கலந்துகொண்டனர். சுதந்திரப்பூங்காவில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி புறப்பட்ட போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, சுதந்திரப்பூங்காவில் நடந்த கண்டன போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 பேரணி மற்றும் முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு பெங்களூரில் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பேரணியின் காரணமாக பெங்களூரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அலுவலகங்களுக்கு செல்வதற்காக புறப்பட்ட மக்கள் பேரணியால் அவதிக்குள்ளானார்கள்.
 மகளுக்கு அழைப்பாணை: பணம் பதுக்கல் தொடர்பான வழக்கில் டி.கே.சிவக்குமார் மகள் ஐஸ்வர்யாவுக்கு செப்.12ஆம் தேதி புதுதில்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதன்பேரில் புதன்கிழமை பெங்களூரில் இருந்து புதுதில்லிக்கு ஐஸ்வர்யா பயணமானார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com