சோமண்ணாவின் அமைச்சர் பதவி குறித்து குமாரசாமி விமர்சனம்

வி.சோமண்ணாவின் நடவடிக்கை அவர் எந்தத் துறைக்கு அமைச்சராக உள்ளார் என்பதில் பொதுமக்களுக்கு குழுப்பத்தை ஏற்படுத்தி வருவதாக மஜத மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

வி.சோமண்ணாவின் நடவடிக்கை அவர் எந்தத் துறைக்கு அமைச்சராக உள்ளார் என்பதில் பொதுமக்களுக்கு குழுப்பத்தை ஏற்படுத்தி வருவதாக மஜத மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
 இதுகுறித்து மைசூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்கள் வீடுகளை இழந்து வீதிகளில் தவித்துள்ளனர். இவர்களுக்கு வீடுகளை கட்டித்தர வேண்டிய அமைச்சர் வி.சோமண்ணா, தசரா விழா நடத்துவதில் மும்முரமாக இருக்கிறார். எனவே, சோமண்ணா, தசரா அமைச்சரா? அல்லது வீட்டுவசதித் துறை அமைச்சரா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
 மாநிலத்தில் வீட்டுவசதித் துறை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருந்திருந்தால் வீதிகளில் தவிக்கும் மக்களுக்கு தற்காலிக வீடுகள் அல்லது கொட்டகைகளையாவது கட்டித்தந்திருப்பார். தசரா விழாவை நடத்துவதற்காக தனது முழுநேரத்தையும் செலவழிக்கும் ஒரே அமைச்சர் சோமண்ணாதான். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுக்கு கொட்டகைகளை அமைத்து தருவதோடு, நிரந்தரமாக வீடுகளை கட்டித்தருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் முதல்வர் இருந்தபோது, குடகு மாவட்டத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்கள் தொந்தரவுக்கு உள்ளான போது அப்போதைய வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் யூ.டி.காதர் ஆகியோர் உடனடியாக அங்கு சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, தற்காலிக கொட்டகை அமைக்க தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தனர்.
 தேசிய பேரிடர் நிவாரணநிதியத்தின் விதிகளின்படி ரூ.35 ஆயிரம் மட்டுமே அளித்திருக்க வேண்டும். ஆனால், எனது அரசு ரூ.1 லட்சம் வழங்கியிருந்தது. அப்போதைய சுற்றுலாத் துறை அமைச்சர் சா.ரா.மகேஷ், குடகு மாவட்டத்திலே முகாமிட்டு நிவாரணப் பணிகளை கவனித்தார். வீடுகளை இழந்தோர் தற்காலிகமாக தங்கியிருக்கமாதம் ரூ.10 ஆயிரம் வாடகை கொடுத்ததோடு, புதிய வீடுகளை கட்டித்தருவதற்கு தலா ரூ.9.75 லட்சம் அளித்திருந்தோம். இப்போதைய வீட்டுவசதித்துறை அமைச்சர் சோமண்ணா என்ன செய்துகொண்டிருக்கிறார்?
 பாதாமி தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மஜத சார்பில் தற்காலிக கொட்டகை அமைத்து தரப்படும். இத்தொகுதியில் உள்ள மக்களுக்கு உதவிசெய்ய அத்தொகுதி எம்எல்ஏ முன்னாள் முதல்வர் சித்தராமையா அல்லது மாநில அரசு உதவிக்கு வராததால், நாங்கள் அந்த உதவியை செய்யவிருக்கிறோம்.
 தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நான் எந்த தவறையும் செய்யவில்லை. எனவே, இது தொடர்பாக விசாரித்துவரும் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். சிபிஐ தவிர, உலகின் எந்த புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தினாலும், என்னை யாராலும் தொடமுடியாது அல்லது சிறைக்கு அனுப்ப இயலாது என்றார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com