டி.கே.சிவகுமார் கைதுக்கு தேவெ கெளடா தான் காரணம்: தகுதிநீக்கப்பட்ட மஜத எம்எல்ஏ பரபரப்பு பேட்டி

வெகுவிரைவில் மஜதவில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் விலகுவார்கள் என தகுதிநீக்கம் செய்யப்பட்ட மஜத எம்.எல்.ஏ. நாராயண கெளடா தெரிவித்தார்.
டி.கே.சிவகுமார் கைதுக்கு தேவெ கெளடா தான் காரணம்: தகுதிநீக்கப்பட்ட மஜத எம்எல்ஏ பரபரப்பு பேட்டி


வெகுவிரைவில் மஜதவில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் விலகுவார்கள் என தகுதிநீக்கம் செய்யப்பட்ட மஜத எம்.எல்.ஏ. நாராயண கெளடா தெரிவித்தார். இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கெளடா, தனது குடும்பத்தைக் காட்டிலும் நாட்டை நேசிக்க வேண்டும். கட்சி நடவடிக்கைகளில் தனது மகன்களின் தலையீடு, குறுக்கீட்டை கட்டுப்படுத்த அவர் தவறி விட்டார். கடந்த 5 ஆண்டுகளில் தேவெ கெளடாவின் மகன்கள், மகள்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் என்னை தொந்தரவு செய்தனர்.

தேவெ கெளடாவின் மகன்கள் தங்களது குடும்பத்தினரை பலப்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், மாநில மக்களுக்கு எந்த நன்மையையும் அவர்கள் செய்யவில்லை. அவர்கள் என்னை தரக்குறைவாக விமர்சித்து வருவதை கடுமையாகக் கண்டிக்கிறேன்.

கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய கிருஷ்ணாவை விரட்டுவதற்காகவே கே.ஆர்.பேட் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளித்தனர். தேவெ கெளடாவின் மகனும், முந்தைய கூட்டணி அரசில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவருமான எச்.டி.ரேவண்ணா தான் ஆட்சிக் கவிழ முக்கியக் காரணம்.

கட்சி எம்.எல்.ஏ.க்களை ரேவண்ணா மதிப்பதில்லை. கே.ஆர்.பேட் தொகுதி வளர்ச்சிக்கு நிதி பெறுவதற்காகவே எடியூரப்பா அரசை கொண்டுவந்துள்ளோம். ஒக்கலிகராக தேவெ கெளடா பிறந்ததால் தான் முதல்வராகவும், பிரதமராகவும் ஆக முடிந்தது. 

முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் எந்த தவறும் செய்யவில்லை. அவர் வெகுவிரைவில் வெளியே வருவார். டி.கே.சிவகுமார் கைது செய்யப்படுவதற்கு சித்தராமையாவோ, பாஜக தலைவர்களோ காரணமல்ல. மாறாக, எச்.டி.தேவெ கெளடா குடும்பத்தினர் தான் காரணம். 

ஒக்கலிகர் சமுதாயத்தினர் யாரும் வளரக் கூடாது என்பது தேவெ கெளடாவின் கொள்கையாகும். டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக தேவெ கெளடா ஏன் நிற்கவில்லை. தனது பேரக்குழந்தைகளை அரசியலில் வளர்த்தெடுக்க அவர் விருப்பப்பட்டாரே தவிர, கட்சியினரை அல்ல. தேவெ கெளடா மீது கோபமடைந்துள்ள மஜத எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் வெகுவிரைவில் அக்கட்சியில் இருந்து விலக இருக்கிறார்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com