மாநகராட்சி அதிகாரிபோல் நடித்து பணம் பறிப்பு: 3 பேர் கைது
By DIN | Published On : 19th September 2019 09:26 AM | Last Updated : 19th September 2019 09:26 AM | அ+அ அ- |

மாநகராட்சி அதிகாரி எனக் கூறி பணம் பறித்ததாக 3 பேரை லஞ்ச ஒழிப்புப் படையினர் கைது செய்தனர்.
பெங்களூரு சிங்கசந்திராவைச் சேர்ந்தவர் தனக்கு சொந்தமான இடத்தில் 4 அடுக்கு கொண்ட கட்டடத்தை கட்டியுள்ளார். அண்மையில் அந்த நபரை அணுகிய ஒருவர் தன்னை சிங்கசந்திரா மாநகராட்சி உதவி பொறியாளர் லோகேஷ் என்று கூறியுள்ளார். மாநகராட்சியின் விதிகளை மீறி கட்டியுள்ள அந்த கட்டடத்தை இடிப்பதாக தெரிவித்த அவர், கட்டடத்தை இடிக்காமல் இருக்க ரூ. 3 லட்சம் தருமாறு கூறியுள்ளார்.
அதன்படி செவ்வாய்க்கிழமை அந்த நபர் முன்பணமாக ரூ. 50 ஆயிரத்தையும், ரூ. 1 லட்சத்திற்கான காசோலையையும், அந்த நபரிடம் வழங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு படையினர் லோகேஷையும், அவருக்கு உதவியாக இருந்த குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் கோவிந்தராஜ் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோரை கைது செய்தனர்.