இடைத்தேர்தலில் போட்டியிடும் மஜத வேட்பாளர்கள் இன்று முடிவு

இடைத்தேர்தலில் போட்டியிடும் மஜத வேட்பாளர்களின் பெயர்களை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்ய இருக்கிறோம் என முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.


இடைத்தேர்தலில் போட்டியிடும் மஜத வேட்பாளர்களின் பெயர்களை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்ய இருக்கிறோம் என முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரு, மஜத தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் மஜத தனித்து போட்டியிடும் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி அறிவித்துள்ளார். 14 மாதங்களாக மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது கிடைத்த அனுபவத்தின் பேரில், இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட குமாரசாமி முடிவுசெய்துள்ளார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மூத்தத் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தில், இடைத்தேர்தலில் மஜத வேட்பாளர்களாக போட்டியிடுவோரின் பட்டியல் முடிவுசெய்யப்படும். கடந்த 3 மாதங்களாக கட்சித் தொண்டர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்துள்ளேன். அப்போது காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம் என தொண்டர்கள் தெரிவித்தனர். காங்கிரஸ் மாநிலத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இடைத்தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம் என்று முடிவுசெய்திருக்கிறோம். 15 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதையும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் கூட்டத்தில் முடிவுசெய்வோம். இவ்வளவு சீக்கிரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. வெற்றி தோல்விகளை பற்றி கவலையில்லை.  கர்நாடக சட்டப்பேரவைக்கு இடைக்கால தேர்தல் நடக்குமா? என்ற கேள்விக்கு நான் இப்போது பதிலளிக்க இயலாது.
மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடப்பதால், கர்நாடகத்தில் இடைத்தேர்தலுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 30 மாவட்டங்களைச் சேர்ந்த மஜத நிர்வாகிகளின் கருத்தறிந்துள்ளேன். எனவே, மஜத தனித்து போட்டியிட்டு வெற்றியைக் குவிக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com