போக்குவரத்து விதிமீறல்அபராதத் தொகை குறைப்பு

குஜராத் மாநிலத்தைத் தொடர்ந்து, கர்நாடக அரசும் போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையை குறைத்து சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.


குஜராத் மாநிலத்தைத் தொடர்ந்து, கர்நாடக அரசும் போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையை குறைத்து சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு அண்மையில் மோட்டார் வாகனச் சட்டம், 1988-இல் திருத்தம் கொண்டு வந்தது. இதில் போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையை அதிகளவில் உயர்த்தியிருந்தது.
மோட்டார் வாகனச் சட்டம், 2019 (திருத்தம்) கர்நாடக அரசு செப். 1-ஆம் தேதியில் இருந்து கர்நாடகத்தில் அமல்படுத்தியது. இந்த புதிய சட்டத்தின்படி, தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.ஆயிரம், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம், கையில் கருவியை வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டினால், ரேசிங்கில் ஈடுபட்டால் தலா ரூ.5 ஆயிரம், அடுத்தடுத்து விதிமீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், மத்திய அரசு விதித்திருந்த அபராதத் தொகையை குஜராத் அரசு குறைத்து உத்தரவிட்டிருந்தது. இதை பிற மாநிலங்களும் பின்பற்றலாம் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, கர்நாடகத்திலும் போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை குறைக்கப்படுமென முதல்வர் எடியூரப்பா அறிவித்திருந்தார். அதன்படி, போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையை குறைத்து சனிக்கிழமை கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பயணச் சீட்டில்லாமல் பயணித்தால் ரூ.500, விதியை மதிக்காவிட்டால் ரூ.ஆயிரம், தகுதியில்லாதோர் வாகனத்தை செலுத்தினால் ரூ.ஆயிரம், உரிமம் இல்லாமல் வாகனம் செலுத்தினால் ரூ.10 ஆயிரம், அதிகவேகமாக வாகனங்களை ஓட்டினால் ரூ.ஆயிரம், ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்தினால் ரூ.10 ஆயிரம், ரேசிங்கில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம், பாதுகாப்பற்ற நிலையில் வாகனங்களை பயன்படுத்தினால் ரூ.1,500, பதிவெண் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.2 ஆயிரம், அதிக பளுவுடன் கனரக வாகனங்களை இயக்கினால் ரூ.5 ஆயிரம், பாதுகாப்பு பெல்ட்டை அணியாமல் கார் ஓட்டினால் ரூ.500, பாதுகாப்பு குறைபாடு இருந்தால் ரூ.500, தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.500, சத்தமில்லா பகுதியில் ஒலிப்பானை பயன்படுத்தினால் ரூ.500, காப்பீடு இல்லாவிட்டால் ரூ.ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என கர்நாடக அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த புதிய அபராதத் தொகை உடனடியாக அமலுக்கு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com