ஹிந்தி மொழியை வங்கியின்வணிக மொழியாகப் பயன்படுத்த வேண்டும்

ஹிந்தி மொழியை வங்கியின் வணிக மொழியாக பயன்படுத்த வேண்டும் என கனரா வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆர்.ஏ.சங்கரநாராயணா தெரிவித்தார்.


ஹிந்தி மொழியை வங்கியின் வணிக மொழியாக பயன்படுத்த வேண்டும் என கனரா வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆர்.ஏ.சங்கரநாராயணா தெரிவித்தார்.
கனரா வங்கியின் சார்பில், பெங்களூரில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஹிந்தி மொழி நாள் விழாவை தொடக்கி வைத்து அவர் பேசியது: நாம் அனைவரும் வங்கித் துறையில் பணியாற்றி வருகிறோம். வங்கித் துறை சேவைத் துறையாகும். நமது வாடிக்கையாளர்களின் மொழியில் நாம் வங்கியின் திட்டங்களை எடுத்துச் செல்லவேண்டும். அப்போதுதான் வங்கியின் வணிகம் பெருகும்.
ஹிந்தி மொழியை வங்கியின் வணிக மொழியாக பயன்படுத்துவதன் மூலம், நாட்டில் உள்ள வங்கிகளில் கனரா வங்கியை முதன்மை இடத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றார் அவர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அரசின் அலுவலக மொழித் துறையின் துணை இயக்குநர் கே.பி.சர்மா பேசுகையில், ஹிந்தியை அலுவல் மொழியாக ஆண்டுதோறும் பிரசாரம் செய்ததில் தென்னிந்திய மக்களின் பங்களிப்பு அபாரமானது. இந்திய மக்களின் வாழ்க்கை முறை, உணவு, நாகரிகம், பண்பாடு அனைத்தும் ஒன்று தான். இந்தியாவை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமானால், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பத்தை இந்திய மொழிகளில் மேம்படுத்தி, அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.
விழாவில், ஹிந்தியை கற்போம் என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டது. இதில், வங்கியின் செயல் இயக்குநர்கள் எம்.வி.ராவ், தேபாஷிஷ் முகர்ஜி, எல்.வி.ஆர்.பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com