கர்நாடகத்தில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிச.5-இல் இடைத்தேர்தல்: மறு தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த ஏற்கெனவே அறிவித்திருந்த தேதியை மாற்றி, டிச.5-ஆம்


கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த ஏற்கெனவே அறிவித்திருந்த தேதியை மாற்றி, டிச.5-ஆம் தேதி தேர்தல் நடத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்திருந்த 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனிடையே, 17 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை நிராகரித்திருந்த அப்போதைய பேரவைத் தலைவர் கே.ஆர்.ரமேஷ்குமார்,  கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் 17 பேரின் எம்.எல்.ஏ.  பதவிகளையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார்.  இதன் விளைவாக, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. 
எதிர்த்து வழக்கு:
இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பேரவைத் தலைவர் பிறப்பித்துள்ள ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.  இந்த வழக்கு விசாரணை கடந்த 3 மாதங்களாக நடைபெற்றுவரும் நிலையில்,  அக்.21-ஆம் தேதி நடத்தவிருந்த தேர்தலை ஒத்தி வைக்குமாறு செப்.26-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இதைத் தொடர்ந்து,  அக்.21-ஆம் தேதி நடக்கவிருந்த இடைத்தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.  இந் நிலையில், அடுத்த விசாரணையை அக்.22-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இடைத்தேர்தலுக்கு மறு தேதி: இந்த நிலையில்,  தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 15 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான மறுதேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  
கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதால்,  மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடத்தவில்லை. 
அத்தானி,  காக்வாட், கோகாக், எல்லாபுரா,  ஹிரேகேரூர்,  ரானிபென்னூர், விஜயநகரா,  சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம்,  யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜிநகர், ஹொசபேட்,  கே.ஆர்.பேட்,  ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு டிச.5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும்.  இத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நவ.11-ஆம் தேதி தொடங்கி,  நவ.18-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  நவ.19-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.  நவ.21-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.  இதைத்தொடர்ந்து,  டிச.5-ஆம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்பட்டு, அந்த வாக்குகள் டிச.11-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். 
இத் தொகுதிகளுக்கு செப்.23 முதல் செப்.27-ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் நவ.19-ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com