உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா

நாடெங்கும் தசரா விழாவைக் கொண்டாடினாலும்,  மைசூரு தசராவுக்கு தனிச் சிறப்பு உண்டு.  10 நாள்கள் நடைபெறும் தசரா விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதால்,  உலகப் புகழ்பெற்ற நிகழ்வாக
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா


நாடெங்கும் தசரா விழாவைக் கொண்டாடினாலும்,  மைசூரு தசராவுக்கு தனிச் சிறப்பு உண்டு.  10 நாள்கள் நடைபெறும் தசரா விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதால்,  உலகப் புகழ்பெற்ற நிகழ்வாக மாறியுள்ளது.  ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் தசரா விழா கொண்டாடப்படுவது வாடிக்கை. மைசூரு தசரா விழாவைக் கண்டுகளிக்க இந்தியா மட்டுமன்றி,  உலகின் பல திசைகளில் இருந்து மக்கள் குவிவதைக் காணலாம்.
ஒன்பது நாள்கள் நவராத்திரி நோன்பிருந்து,  பத்தாவது நாளில் விஜயதசமி கொண்டாடுவதை தசரா என்று அழைக்கிறார்கள்.  தீமையை வீழ்த்தி உண்மை வெற்றி கொண்டதை விஜயதசமி குறிக்கும் என்றாலும்,  மைசூரு நகரை ஆண்ட மகிஷாசுரன் என்ற அரக்கனை சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்து கொன்றதன் வெற்றி விழாவாக தான் தசரா கொண்டாடப்படுகிறது.
கர்நாடகத்தின் பெரும் பகுதியை தங்கள் வசம் வைத்திருந்த விஜயநகரப் பேரரசர்கள் 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தசரா விழா கொண்டாடும் வழக்கத்தை சிறிய அளவில் தொடங்கியுள்ளனர்.  விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, இது நின்றுபோனது.
1578 முதல் 1617-ஆம் ஆண்டு சுமார் 39 ஆண்டு காலம் மைசூரை ஆண்ட ராஜா உடையார், தலைநகரத்தை ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு மாற்றிய பிறகு 1610-ஆம் ஆண்டில் முதல்முறையாக அரச விழாவாக தசரா விழா நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தசரா விழா கர்நாடகத்தில், குறிப்பாக மைசூரில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு அரச குடும்பத்தினர் சிறப்பு பூஜை செய்வதன் மூலம் தசரா தொடங்குவது மரபு.  1805-ஆம் ஆண்டு முதல் தசரா காலத்தில் அரசவைக் கூட்டம் நடத்தும் வழக்கத்தை மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் தொடக்கிவைத்தார்.  இந்தக் கூட்டத்தில் அரச குடும்பத்தினர், சிறப்பு அழைப்பாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்பது வழக்கம்.  இப்போது இந்த மரபை அரச குடும்ப வாரிசான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் செய்துவருகிறார்.  மகாநவமி நாளில் யானைகள்,  ஒட்டகங்கள், குதிரைகள் புடைசூழ அரசரின் வாள் ஊர்வலமாக எடுத்துச்சென்று வழிபடுவது வழக்கம்.
கர்நாடகத்தில் தசரா மாநில விழாவாகக் கொண்டாடப்படுவதால்,  மைசூரில் உள்ள அரண்மனை,  அரசு அலுவலகங்கள்,  சாலைகள் அலங்காரம் செய்து அழகு செய்யப்படும். விழாக் காலத்தில் தினமும் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு லட்சம் விளக்குகளில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அரண்மனை,  ஒளி வெள்ளத்தில் மின்னும். அந்த வளாகத்தில் கலாசார மற்றும் மதரீதியான நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.  இசை, நடனம், கவியரங்கம், மல்யுத்தம், விளையாட்டுகள், சிறுவர் போட்டிகள், சாகசங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். 
விஜயதசமி நாளன்று பாரம்பரிய தசரா ஊர்வலம் நடைபெறும்.  ஜம்போ சவாரி, யானைகள் ஊர்வலம் போன்ற பெயர்களால் அழைக்கப்படும் தசரா ஊர்வலத்தைக் காண தெருவெங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.  அலங்காரம் செய்யப்பட்ட யானையின் மீது வைக்கப்பட்டிருக்கும் தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க ஊர்வலம் தொடங்கும்.  முக்கிய வீதிகளில் உலா செல்லும் யானைகளை பின் தொடர்ந்து அலங்கார ஊர்திகள்,  நடனக் குழுக்கள், இசைக் குழுக்கள், யானை, ஒட்டகம் மற்றும் குதிரை பட்டாளம் அணிவகுக்கும்.  அரண்மனையில் தொடங்கும் ஊர்வலம் பண்ணிமண்டபத்தை அடையும்.  அஞ்ஞானவாசத்தின் போது பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை பண்ணிமரத்தில் ஒளித்துவைத்ததாக காப்பியம் கூறுவதால், போரில் வெற்றியைக் குவிக்க இங்கு பூஜை செய்துவிட்டுச் செல்வதை உடையார் அரசர்கள் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.  அந்த மரபின்படி, பண்ணி மண்டபத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபடுவதோடு,  தசராவிழாவை நிறைவுசெய்வதை குறிக்கும் வகையில் தீப்பந்த ஊர்வலம் நடத்தப்படும்.
தசரா விழாவை முன்னிட்டு மைசூரில் அரண்மனை எதிரே அமைந்துள்ள மைதானத்தில் ஒருமாத காலம் பொருள்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.  1880-ஆம் ஆண்டில் தசராவின்போது பொருள்காட்சி திறக்கும் வாடிக்கையை பத்தாம் சாமராஜ உடையார் தொடக்கிவைத்தார்.  அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. 10 நாள்களும் மக்கள் வெள்ளத்தில் மைசூரு விழாக்கோலம் பூண்டிருக்கும்.  இந்தாண்டுக்கான தசரா திருவிழா செப்.29-ஆம் தேதி தொடங்கி அக்.8-ஆம் தேதியுடன்நிறைவடைகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com