பொறியியல் கல்லூரிகளில் ஆளில்லா விமானங்கள் குறித்த விருப்பப் பாடம்: விஞ்ஞானி வி.டில்லிபாபு வலியுறுத்தல்

 தேசிய அளவில் பொறியியல் கல்லூரிகளில் ஆளில்லா விமானங்கள் குறித்த விருப்பப்பாடத்தை வைக்க தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம்(என்டிஆர்எஃப்)வாயிலாக முயற்சிகள் எடுக்கப்படும்


 தேசிய அளவில் பொறியியல் கல்லூரிகளில் ஆளில்லா விமானங்கள் குறித்த விருப்பப்பாடத்தை வைக்க தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம்(என்டிஆர்எஃப்)வாயிலாக முயற்சிகள் எடுக்கப்படும் என்று அதன் இயக்குநரும்,  விஞ்ஞானியுமான டாக்டர்.வி.டில்லிபாபு
தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள பொதுத் துறை நிறுவனமான ஐ.டி.ஐ.வின்யாஸ் அரங்கில் பொறியியல் மாணவர்கள், தொழில் துறை நிறுவனங்களுக்கு ஆளில்லா விமானங்கள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.  தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின்(டிஆர்டிஎஃப்) இயக்குநரும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) விஞ்ஞானியுமான டாக்டர் வி.டில்லிபாபு கருத்தரங்கைத் தொடக்கி வைத்து அவர் பேசியது:  தேசிய அளவில் பொறியியல் மாணவர்களுக்கு ஆளில்லா விமானங்கள் பற்றிய தொழில்நுட்பத்தை விருப்பப் பாடமாகக் கொண்டு வர தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம்(என்டிஆர்எஃப்) முயற்சி செய்கிறது. வேளாண்மை, ரயில்வே, ராணுவம், நெடுஞ்சாலைத் துறைகளில் ஆளில்லா விமானங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  
2020-ஆம் ஆண்டில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆளில்லா விமானத் துறை இந்தியாவில் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.  இந்தியாவில் மிக விரைவில் மருத்துவத் துறையில் ஆளில்லா விமானங்கள் பெரும் பங்காற்றும்.  நகரத்துப் போக்குவரத்து நெரிசலைத் தாண்டி உடலுறுப்புகளை அறுவை சிகிச்சைக்காக கொண்டுசெல்லவும், உயிர்காக்கும் மருந்துகளை விநியோகம் செய்யவும் அவை பயன்படும்.
அதிக எண்ணிக்கையில் ஆளில்லா விமானங்களை இறக்குமதி செய்வதில் உலகின் முதல் நிலையில் உள்ளது இந்தியா.  உலகில் விற்பனையாகும் ஆளில்லா விமானங்களில் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதி இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது.  எனவே,  இந்தியாவில் ஆளில்லா விமானங்கள் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட வேண்டும்.  பொறியியல் மாணவர்களும், தொழில்நிறுவனங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
எதிர்காலத்தில் ஆளில்லா விமானத் துறையில் பங்காற்ற மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில்,  ஆளில்லா விமானத் தொழில்நுட்பம்,  பயன்பாடுகள், கட்டுப்பாடுகள், கொள்கைகள் ஆகியவை விருப்பப் பாடமாக தேசிய அளவில் தேவை.  இதற்காக என்.டி.ஆர்.எப் நிறுவனம் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையை அணுகி அதற்கான முயற்சிகளில் ஈடுபடும்.  இதற்கான ஆயத்தப் பணிகள் என்.டி.ஆர்.எஃப். தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் ஆலோசனையின் பேரில் தொடங்கப்படும் என்றார்.
கருத்தரங்கில் தென்னிந்தியாவிலிருந்து மாணவர்களும்,  பேராசிரியர்களும், தொழில் நிறுவனங்களும் பங்கேற்றனர்.  வித்யா சங்க தொழில்நுட்பங்கள் நிறுவனம், ஐ.டி.ஐ, என்.டி.ஆர்.எஃப். ஆகியவை இக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஆளில்லாவிமானங்களின் பறக்கும் சோதனைகளும் செய்து காட்டப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com