மைசூரில் கோலாகலமாகத் தொடங்கிய தசரா !

வரலாற்று சிறப்பு வாய்ந்த,  உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

வரலாற்று சிறப்பு வாய்ந்த,  உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த விழாவை கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா தொடக்கிவைத்தார். அக்டோபர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
மைசூரில் தசரா திருவிழா 409-ஆம் ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.   இதற்காக சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் காலை 9.39 மணி முதல் 10.25 மணிக்குள் கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா சிறப்புப் பூஜை நடத்தி,  தொடக்கிவைத்தார். 
மஜத எம்எல்ஏ ஜி.டி.தேவெ கெளடா தலைமையில் நடைபெற்ற விழாவில்,  முதல்வர் எடியூரப்பா,  மத்திய அமைச்சர்கள் சதானந்த கெளடா,  பிரஹலாத் ஜோஷி, துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி.சோமண்ணா,   கன்னட  கலாசாரத் துறை அமைச்சர் சி.டி.ரவி,  மைசூரு மேயர் புஷ்பலதா ஜெகனாத், மைசூரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பி.சி.பரிமளா ஷியாம், பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
உற்சாக வரவேற்பு: முன்னதாக, சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு வருகைதந்த எஸ்.எல்.பைரப்பாவுக்கு பூரணகும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
விழாக் கோலம்: மைசூரில் அரண்மனை, மிருகக்காட்சிச் சாலை, சாமுண்டீஸ்வரி கோயில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிருஷ்ணராஜ சாகர் அணை,  பிருந்தாவன் தோட்டம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு,   நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.   தெருவெங்கும் உற்சாகம் பொங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 
கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி,   நாட்டின் பல்வேறு பகுதிகள்,  வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் தசரா திருவிழாவைக் காண மைசூருக்கு வந்திருந்தனர். இந்த விழாவை பல லட்சம் பேர் பங்கேற்று,  சிறப்பிக்க உள்ளனர்.
வண்ணமயமான விழாக்கள்: மைசூரில் உள்ள பல்வேறு இடங்களில் கிராமியக் கலை விழா,  திரைப்பட விழா,  உணவு விழா, விவசாயிகள் விழா, யோகா விழா, நாட்டிய நடன விழா, இளைஞர் விழா, சிறுவர் விழா,  மகளிர் விழா, இசை விழா, நடன விழா, தோட்டக்கலை விழா,  தெரு விழா, மலர் கண்காட்சி, பொருள்காட்சி, நூல் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், பளுதூக்கும் போட்டி,  குஸ்தி போட்டி, சாகச நிகழ்ச்சிகள், பொருள்காட்சி, கன்னட கவியரங்கம் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை துறை சார்ந்த அமைச்சர்கள் தொடக்கி வைத்தனர். 
அடுத்த 10 நாள்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மைசூரில்
நிகழவிருக்கின்றன. 
பாதுகாப்புக்காக ஆங்காங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  வெளிநாடுகள்,  வெளி மாநிலங்களில் இருந்து வருகைதந்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு போக்குவரத்து,  தங்கும் வசதிகள் செய்யபட்டுள்ளன.  தசரா திருவிழா அக்டோபர் 8-ஆம் தேதி யானை ஊர்வலத்துடன் நிறை
வடையவுள்ளது. 
தனியார் தர்பார்:  மைசூரு மன்னர் உடையார் குடும்ப மரபுப்படி,   தசரா விழாவின்போது  முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், வெளிநாட்டு அரசர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் தனியார் தர்பார்(அரசவை) நடைபெறும்.  மன்னர் முறை நீக்கப்பட்டாலும்,   மன்னர் குடும்ப வாரிசுகள் தனியார் தர்பார் நடத்தும் மரபை தவறாமல் பின்பற்றி
வருகின்றனர்.
இதன்படி, மைசூரு அரண்மனையில் உடையார் மன்னர் குடும்பத்து பட்டத்து இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தனியார் தர்பாரை நடத்தினார்.   இதற்காக,  தங்கச் சிம்மாசனத்தில் யதுவீர்கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் அமர்ந்திருந்தார்.   இவருக்கு அவரது மனைவியும் பட்டத்து இளவரசியுமான திரிஷிகா குமாரி தேவி பாதபூஜை செய்து வழிபட்டார்.  
அடுத்த 10 நாள்களுக்கும் அரண்மனையில் வெவ்வேறு வகையான பூஜைகள் நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com