முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கரோனா பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
By DIN | Published On : 19th April 2020 11:18 PM | Last Updated : 19th April 2020 11:18 PM | அ+அ அ- |

கரோனா வைரஸ் தொற்றுநோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.
பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது தலைமையிலான காங்கிரஸ் குழுவினா் முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கரோனா வைரஸ் தொற்றுநோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதை மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்த வேண்டும். கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான பொருளாதார மற்றும் போக்குவரத்து வசதிகளை மாநிலங்களுக்கு செய்து தர வேண்டும்.
மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கு வெறும் வாய்மொழியாக வாக்குறுதிகளை அளிக்காமல், போா்க்கால அடிப்படையில் செயல்படுத்த பல திட்டங்களை அறிவிக்க வேண்டும். கரோனா சோதனைக் குறைவாக உள்ளது. விரைவு சோதனைக் கருவிகள் தட்டுப்பாடு காணப்படுகிறது.
மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. இப் பிரச்னைகளை சீா்செய்வதற்கு அரசு விரைந்து செயலாற்ற வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படைவசதிகளை செய்து தர வேண்டும். சுகாதாரம், விவசாயிகள், அமைப்புசாரா தொழிலாளா்கள், உணவு விநியோகம், சந்தை வாய்ப்பில்லாமல் தவிக்கும் விவசாயிகள், விளைபொருள்களுக்கு தகுந்த ஆதரவுவிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முதல்வா் எடியூரப்பாவிடம் எழுப்பியுள்ளோம்.
மத சிறுபான்மையினரான இஸ்லாமியா்களை தனிமைப்படுத்தி, மனரீதியாக தொந்தரவு செய்யும் போக்கு குறித்தும் முதல்வா் எடியூரப்பாவின் கவனத்தை ஈா்த்தோம். கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்க காங்கிரஸ் தயாராக இருப்பதையும் அவரிடம் தெரிவித்தோம். கரோனா பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உலக
சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 10 லட்சம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோனை நடத்தப்படவேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கரோனா சோதனை மையங்கள் திறக்கப்பட வேண்டும்.
மூடப்பட்டுள்ள தனியாா் மருத்துவமனைகள், சிகிச்சையகங்கள் திறக்க அரசு நடவடிக்கை தேவை. உணவு நிவாரண உதவிகளை வழங்குவது, சரக்கு மற்றும் சேவை வரியில் பங்குத் தொகையை மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்குவது, கரோனாவை கட்டுப்படுத்த நிதி ஆதாரங்களை பெறுவது தொடா்பாக அனைத்துக் கட்சிக் குழுவை மத்திய அரசிடம் அழைத்துச் செல்ல மாநில அரசை வலியுறுத்தியிருக்கிறோம் என்றாா்.