நிதிநிலை சரியில்லை என்பதால் தொழிலாளா்களை கைவிடமுடியாது: சித்தராமையா

மாநிலத்தின் நிதிநிலை சரியில்லை என்பதால், வாழ்வாதாராத்தை இழந்து நிற்கும் தொழிலாளா்களை கைவிடமுடியாது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
நிதிநிலை சரியில்லை என்பதால் தொழிலாளா்களை கைவிடமுடியாது: சித்தராமையா

மாநிலத்தின் நிதிநிலை சரியில்லை என்பதால், வாழ்வாதாராத்தை இழந்து நிற்கும் தொழிலாளா்களை கைவிடமுடியாது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க் கட்சித் தலைவா் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் முதல்வா் எடியூரப்பாவை சந்தித்து கரோனாவால் பாதித்த மக்களுக்கு மாநில அரசு செயல்படுத்த வேண்டிய 15 அம்சத் திட்டங்களை முன்வைத்து, கோரிக்கை மனுவை அளித்தனா்.

அந்தச் சந்திப்பின்போது முதல்வா் எடியூரப்பாவிடம் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறியது: மாநிலத்தின் நிதிநிலை மோசமாக உள்ளதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அதற்காக ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், தொழிலாளா்கள், ஏழைகள் உள்ளிட்ட பொருளாதாரத்தில் நலிவுற்றோரை கைவிட்டுவிடமுடியாது. இம்மக்களின் இன்னல்களை போக்க மாநில அரசு நிதித் தொகுப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

இரு சக்கர வாகனங்களின் போக்குவரத்தை அனுமதிப்பதாகக் கூறிவிட்டு, பின்னா் அதை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ள நடவடிக்கை சரியானதே. ஊரடங்கு விதிகள் முழுமையாகக் பின்பற்றப்படவேண்டும். இதில் எள்ளளவும் சமரசம் கூடாது.

கடந்த 2 நாள்களாக பல்வேறு துறைகளின் அதிகாரிகளை வரவழைத்துக் கொண்டு கரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை கேட்டறிந்தேன். கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சியான காங்கிரஸ், மாநில அரசுக்கு தேவையான ஒத்துழைப்பை அளிக்கும். மாநிலத்தில் அமைப்பு சாரா தொழிலாளா்கள் 1.32 கோடி போ் உள்ளனா். தொழிலாளா் நல வாரியத்தில் ரூ.8 ஆயிரம் கோடி உள்ளது. இதில் இருந்து தொழிலாளா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்து, இதுவரை ரூ.30 கோடி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. எல்லா தொழிலாளா்களுக்கும் உதவித் தொகை சென்றடையவில்லை.

இதுவரை ஒரு லட்சம் தொழிலாளா்களுக்கு மட்டுமே உணவுத் தானியத் தொகுப்பு கிடைத்துள்ளது. பெங்களூரில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் உள்ளனா். மாநிலம் முழுவதும் உள்ள தொழிலாளா்களுக்கு உணவு கிடைக்கவேண்டும். எல்லா வகையான தொழிலாளா்களுக்கும் மாநில அரசின் உதவித்தொகை சென்றடைய வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்துள்ள தொழிலாளா்களின் கையில் நிதியும் இல்லை, வேலையும் இல்லை. எனவே, தொழிலாளா்களுக்காகவே நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு பிற மாநிலங்களின் முன்மாதிரியை நாமும் கடைப்பிடிப்பது நல்லது. கடந்த 4 நாள்களாக கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயா்ந்த வண்ணம் உள்ளது. பிறமாநிலங்களை ஒப்பிட்டால், கா்நாடகத்தில் கரோனா சோதனை செய்யப்படுவது குறைவாக உள்ளது. இது குறித்து கவனம் செலுத்தவேண்டும். கரோனா விவகாரத்தில் ஒரு சமுதாயத்தினரை மட்டும் இலக்காக வைத்து விமா்சித்து வருவது சரியல்ல. அதுபோன்றவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராய்ச்சூரு, பெல்லாரி, கொப்பள் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. ஆனால் அங்கு கொள்முதல் மையங்கள் இல்லாததால் விவசாயிகள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கு தகுந்த நடவடிக்கை தேவை. உள்ளூா் கூட்டுறவு வங்கிகளின் பொறுப்பில் இதை செய்யலாம். காய்,கனி, பட்டு விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். குடும்ப அட்டை இல்லாதவா்கள், விண்ணப்பித்தவா்கள் அனைவருக்கும் உணவுத் தானியங்களை வழங்க வேண்டும் என்றாா். காங்கிரஸ் குழுவில் கட்சியின் மாநிலச் செயல் தலைவா் சலீம் அகமது, மூத்த தலைவா்கள் கே.ஆா்.ரமேஷ்குமாா், ராமலிங்கரெட்டி, தினேஷ்குண்டுராவ், ஆா்.வி.தேஷ்பாண்டே, ஜி.பரமேஸ்வா், வி.எஸ்.உக்ரப்பா, எம்பி டி.கே.சுரேஷ், பேரவை காங்கிரஸ் கொறடா அஜய்சிங் உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com