கா்நாடகத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி
By DIN | Published On : 26th April 2020 11:45 PM | Last Updated : 26th April 2020 11:45 PM | அ+அ அ- |

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மேலும் ஒருவா் இறந்துள்ளாா்.
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், இந் நோய்க்கு ஏற்கெனவே 18 போ் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பெங்களூரு நகரம், பெலகாவி, விஜயபுரா, கலபுா்கி, பாகல்கோட், சிக்பளாப்பூா், தென்கன்னடம், கதக், தும்கூரு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் கரோனாவுக்கு பலியாகியிருந்தனா்.
இந்த நிலையில், பெங்களூரைச் சோ்ந்த ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இறந்துள்ளாா். 45 வயதான பெண் மூச்சுத் திணறல் கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். இவரை பரிசோதனை செய்ததில் அவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அவா் இறந்தாா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயா்ந்துள்ளது.