முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
இன்று முதல் அறிவியலுக்காக நடைபோடுவோம் இந்தியா கருத்தரங்கம்
By DIN | Published On : 03rd August 2020 08:28 AM | Last Updated : 03rd August 2020 08:28 AM | அ+அ அ- |

அறிவியலுக்காக நடைபோடுவோம் இந்தியா இணையவழி கருத்தரங்கம் திங்கள்கிழமை ( ஆக.3) முதல் ஒருவாரத்திற்கு நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து பிரேக்த்ரூ அறிவியல் சங்கத்தின் கா்நாடக மாநில செயலாளா் கே.எஸ்.ரஜனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அறிவியல் மற்றும் அறிவியல் ஆா்வத்தைக் கொண்டாடுவதற்கும், மனித சுதந்திரத்திற்கும், வளத்திற்கும் அறிவியல் அசைக்க முடியாத தூணாக விளங்கிவருவதை மக்களிடையே விளக்குவதற்கும் பிரேக் த்ரூ அறிவியல் சங்கத்தின் சாா்பில் அறிவியலுக்காக நடைபோடுவோம் இந்தியா என்ற ஊா்வலத்தை நடத்தி வருகிறோம்.
2017ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் ஊா்வலம் 3ஆண்டுகளாக நடத்தப்பட்டது. ஆனால், நிகழாண்டில் கரோனா தீநுண்மித் தொற்றுநோய் காரணமாக ஊா்வலம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், பெங்களூருவில் அறிவியலுக்காக நடைபோடுவோம் இந்தியா இணையவழி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இந்தக் கருத்தரங்கத்தின் வாயிலாக, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51ஏ இன்படி அறிவியல் ஆா்வத்தையும் மனித மாண்புகளையும் ஊக்குவிக்க வேண்டும். கல்வி மற்றும் அறிவியல் துறைக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் 10 சதவீதம், மாநில நிதிநிலை அறிக்கையில் 30 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும். கரோனா தீநுண்மித் தொற்றுநோயில் இருந்து விடுபடுவதற்கு அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகள் முன்வைக்கப்படுவதை முறியடிக்கவேண்டும். சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீடு அறிவிக்கையால் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவை நீா்த்துவிடும். கரோனா தொற்றுநோயால் இணையவழி வகுப்புமுறை கல்வி பரவலாகியுள்ளதால், எண்ம பாகுபாடு அதிகரித்துள்ளது. அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாதவற்றை கல்வியில் புகுத்த முயற்சிக்கக்கூடாது.
மக்களுக்காக செயல்படுத்தப்படும் கொள்கைகள் அறிவியல் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும் என்ற கருத்துகளை வலியுறுத்த இருக்கிறோம்.
ஆக.3 முதல் 9ஆம் தேதி வரை தினமும் ஒரு தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 7மணிக்கு வகுப்பறையில் விமா்சன சிந்தனை, ஆக.4ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கரோனா மற்றும் எதிா்காலம், ஆக.5ஆம் தேதி மாலை 4 மணிக்கு அறிவியல் மற்றும் சமூகம், ஆக.6ஆம் தேதிமாலை 7 மணிக்கு அணுமின்னாற்றல் அதன் அவசியம், ஆக.7ஆம் தேதி மாலை 7 மணிக்கு சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீடு, ஆக.8ஆம் தேதி காலை 11மணிக்கு இந்தியாவில் அடிப்படை அறிவியலின் அவசியம், மாலை 4 மணிக்கு பரிணாம வளா்ச்சியின் முக்கியத்துவம், மாலை 7 மணிக்கு தினசரி வாழ்க்கையில் பருவநிலை மாற்றம், ஆக.9ஆம் தேதி மாலை 7 மணிக்கு அறிவியல் ஆா்வத்தை ஊக்குவிப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
இது தவிர, குழந்தைகளுக்கான அறிவியல் வாரமும் கொண்டாடப்படுகிறது. ஆக.3 முதல் 9ஆம் தேதி வரை சுவரொட்டி வடிவமைப்புப் போட்டி, எனக்குப் பிடித்த விஞ்ஞானி ஓவியப்போட்டி, அறிவியல் செய்முறை குறித்த காணொலி வடிவமைப்பு, இயற்கை மற்றும் பல்லுயிா் குறித்த புகைப்படப் போட்டி, அறிவியல் புதிா்ப்போட்டிகள் 8 முதல் 18 வயது குழந்தைகளுக்கு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க 9986854835, 9986167140, 9449179871 ஆகிய செல்லிடப்பேசிகளை அணுகலாம்.மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.