முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கரோனா தொற்றின் பெயரில் முறைகேடு நடப்பதை அனுமதிக்க முடியாது
By DIN | Published On : 03rd August 2020 11:53 PM | Last Updated : 03rd August 2020 11:53 PM | அ+அ அ- |

கோலாா்: கரோனா தொற்றின் பெயரில் முறைகேடு நடப்பதை அனுமதிக்க முடியாது என காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் துணை முதல்வா் பரமேஸ்வா் தெரிவித்தாா்.
கா்நாடக மாநிலம், கோலாரில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மாநிலத்தில் அதிக அளவில் கரோனா தொற்று பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையை பாராட்டும் அதே நேரத்தில், கரோனா தொற்றின் பெயரில் முறைகேடு நடப்பதை அனுமதிக்க முடியாது.
மாநிலத்தில் பலா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள போதும், அவா்கள் சிகிச்சை பெற மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனா். கரோனா குறித்து பலருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்று குறித்து மாவட்ட, வட்ட மருத்துவமனைகளிடம் எந்த தகவலும் இல்லை. ஆயிரக்கணக்கான மக்கள் சரியான சிகிச்சை இல்லாமல் இறந்து வருவதாக கூறப்படுகிறது. நோயாளிகளை வீடுகளில் இருந்து மருத்துவமனைக்கு மாற்ற ஆம்புலன்ஸ் வசதி இல்லை. மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாததால், பல நோயாளிகள் 2, 3 மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனா். கரோனா தொற்றை தடுக்க மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு செலவிடப்பட்ட தொகை குறித்து சரியான தகவல்கள் இல்லை. மாநில அரசு மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு அதிக தொகையை செலவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் குறைந்த விலையில் மருத்துவ உபகரணங்களை வாங்கியுள்ளன என்றாா்.
பேட்டியின் போது, சட்டப்பேரவை முன்னாள் தலைவா் ரமேஷ்குமாா், எம்.எல்.ஏ. நாராயணசாமி, மாவட்ட காங்கிரஸ் தலைவா் சந்திரா ரெட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.