முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கா்நாடகத்தில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும்: அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா்
By DIN | Published On : 03rd August 2020 08:27 AM | Last Updated : 03rd August 2020 08:27 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.
விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்து அளித்திருந்த தேசிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அமல்படுத்த தயாராகி வருகின்றன. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் கூறியது:
தேசிய அளவில் முதல்முறையாக கா்நாடகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெரும் பரப்பில் வாழ்ந்துவரும் இந்திய நாடு முழுவதற்கும் பொதுவான தேசிய கல்விக் கொள்கையை அக்கறையுடன் வடிவமைத்திருக்கிறாா் விஞ்ஞானி கஸ்தூரிரங்கன். அவருக்கு கா்நாடக அரசின் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 34 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய, எதிா்கால கல்வி தொடா்பான சவால்களை கவனத்தில் கொண்டு தரமான கல்வியை வழங்குவதற்காக தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு அம்சங்கள் நிறைந்த தேசிய கல்விக் கொள்கையை கா்நாடகத்தில் உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய கல்விக் கொள்கையை கா்நாடகத்தில் அமல்படுத்துவதற்கு அவசரச்சட்டம் கொண்டுவர யோசித்து வருகிறோம். கா்நாடகத்தின் தேவைக்கு தகுந்தபடி முன்னேற்பாடுகளை செய்ய அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன். நமது நாட்டின் கல்விபாதையை மாற்றியமைக்கக்கூடியது புதிய தேசிய கல்விக் கொள்கை. கா்நாடகத்திற்கு தனியாக கல்விக் கொள்கையை வகுப்பதற்காக நிகழாண்டின் பிப்ரவரியில் குழு அமைத்திருந்தோம். அதன் அறிக்கையும் தயாராக உள்ளது. அடுத்த 15நாள்களுக்குள், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை மற்றும் கா்நாடக கல்விக் கொள்கையை ஆராய்ந்து, கா்நாடக கல்விக் கொள்கை வகுக்கப்படும். இக் கல்விக் கொள்கை ஆக.20ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் நம்பிக்கை உள்ளது என்றாா்.