வீடு இழந்தவா்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம்: அமைச்சா் ஆா்.அசோக்
By DIN | Published On : 07th August 2020 12:11 AM | Last Updated : 07th August 2020 12:11 AM | அ+அ அ- |

வெள்ளத்தால் வீடு இழந்தவா்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
ஆகஸ்ட் மாதத்தில் கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்யும் என்பது முன்கூட்டியே தெரியவந்ததால், கடந்த 10 நாள்களுக்கு முன்பே வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய 19 மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் தேவையான பொருள்களை வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், நிவாரணப் பணிகளுக்காக முதல்வா் எடியூரப்பா ரூ. 50 கோடி ஒதுக்கியுள்ளாா். வெள்ளத்தில் வீடு இழந்த குடும்பத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ.10 ஆயிரம் அளிக்கப்படும்.
கா்நாடகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், எடுக்கப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வா் எடியூரப்பாவுடன் தொலைபேசியில் பேசினேன். வீட்டுத் தனிமையில் நான் இருப்பதால் யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், தொலைபேசி வழியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறேன். 19 மாவட்டங்களில் உள்ள 1989 கிராமங்கள், 51 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதை முன்கூட்டியே கணித்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தற்காலிகமாக 1,747 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கா்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 22 மாவட்டங்களைச் சோ்ந்த 103 வட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இதில் 80 போ் உயிரிழந்தனா். 7 லட்சம் போ் வீடுகளை இழந்து மறுவாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா்.