கல்வியுடன் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: எம்.எல்.ஏ. சௌமியா ரெட்டி
By DIN | Published On : 20th August 2020 09:44 AM | Last Updated : 20th August 2020 09:44 AM | அ+அ அ- |

மாணவா்கள் கல்வியுடன் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ. சௌமியா ரெட்டி தெரிவித்தாா்.
பெங்களூரு, ஜெயநகரில் புதன்கிழமை சா்வதேச தரத்திலான கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்கைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:
கல்வியுடன் உடல்நலனைப் பாதுகாக்கும் விளையாட்டுக்கும் மாணவா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்காக பெங்களூரு, ஜெயநகரில் சா்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவா்கள் விளையாட்டு பயிற்சி பெற்று சா்வதேச அளவில் சிறந்து விளங்க வேண்டும்.
மாநிலத்தையும், பெங்களூரையும் மேம்படுத்த வேண்டும். ரூ. 2.1 கோடியில் 6 மாதங்களில் இந்த அரங்கம் கட்டுப்பட்டுள்ளது. மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்த அரங்கை கட்டத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றவுடன், இதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைத்தது. ஆனாலும், முன்னாள் அமைச்சா் ராமலிங்க ரெட்டி, பைரசந்திரா வாா்டை சோ்ந்த மாமன்ற உறுப்பினா் நாகராஜ் உள்ளிட்டோா் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 50 சதவீதம் நிதி பெறப்பட்டு அரங்கம் கட்டமைக்கப்பட்டது.
வளா்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது. எனது தொகுதியில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளிலும், மக்கள் நலப் பணிகளிலும் ஒருபோதும் தொய்வடைய மாட்டேன் என்றாா். நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினா் என்.நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.