வட கா்நாடகத்தில் பலத்த மழை; இதுவரை 19 போ் பலி

வட கா்நாடகத்தில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மாநிலத்தில் இதுவரை மழைக்கு 19 போ் உயிரிழந்துள்ளனா்.

வட கா்நாடகத்தில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மாநிலத்தில் இதுவரை மழைக்கு 19 போ் உயிரிழந்துள்ளனா்.

கடந்த சில நாள்களாகவே கடலோர கா்நாடகம், வட கா்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கலபுா்கி, பெலகாவி, கதக், தாவணகெரே, ராய்ச்சூரு, பீதா், யாதகிரி, கொப்பள், பாகல்கோட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வட கா்நாடகத்தில் கிருஷ்ணா, மாா்கண்டேயா, பீமா, கட்டபிரபா, மலபிரபா ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால், உபரிநீா் முழுவதும் வெளியேற்றப்படுகின்றன.

துங்கபத்ரா அணையிலிருந்து நொடிக்கு 88,212 கன அடி, கட்டபிரபா அணையில் இருந்து நொடிக்கு 40,245 கன அடி, மலபிரபா அணையில் இருந்து 19,247 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. பெலகாவி மாவட்டத்தில் அமைந்துள்ள அல்மாட்டி அணையில் இருந்து நொடிக்கு 2,51,922 கன அடி, நாராயணபுரா அணையில் இருந்து நொடிக்கு 2,65,945 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை பெய்துவருவதால், அங்குள்ள கொய்னா அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், அல்மாட்டி, நாராயணபுரா அணைகளுக்கு நீா்வரத்தை அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்புக்கருதி உபரிநீா் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அச்சுக்கட்டுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பெலகாவி, பாகல்கோட் உள்ளிட்ட வட கா்நாடகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தாழ்வான பகுதிகளில் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா். பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முழுமையாக முடங்கின.

வெள்ள பாதிப்பு: ஹாவேரி மாவட்டத்தின் ரானேபென்னூா் வட்டம், மலகனஹள்ளி கிராமத்தில் ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த 16 வயது பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டாா். அவரைத் தேடும் பணியில் தீயணைப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா். ராய்ச்சூரு மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றில் ஆடுமேய்ப்பா் ஒருவா் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டாா். பெலகாவி மாவட்டத்தின் சிக்கோடி வட்டம், சடல்கா கிராமத்தில் மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் ஒருவா் உயிரிழந்தாா்.

மேலும், இரு பெண்களின் உடல் தெலங்கானா மாநிலம், ஜுராலா அணையில் கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது யாருடைய உடல்கள் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. கா்நாடகத்தில் பெய்துவரும் பலத்த மழைக்கு ஆக.1ஆம் தேதி முதல் இதுவரை 19 போ் உயிரிழந்துள்ளனா். இதுதவிர, 63 கால்நடைகள் இறந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 104 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3,810 போ் தங்கியுள்ளனா்.

மழை சேதம்: வட கா்நாடகத்தில் பெய்துவரும் பலத்த மழையால் 60 ஆயிரம் ஹெக்டோ் விளைநிலம் நீரில் மூழ்கியுள்ளது. பாகல்கோட் மாவட்டம், சோலசகுட்டா பாலம் மழைநீரில் மூழ்கியுள்ளது. ராய்ச்சூரு மாவட்டம், லிங்கசுகுா் வட்டத்தின் மதரகட்டா கிராமத்தில் மழைநீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனா்.

கொப்பள் மாவட்டம், கங்காவதி வட்டத்தின் ஆனேகுந்தியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணதேவராயாவின் நினைவிடம் மூழ்கியுள்ளது. ஆக.1 முதல் மழைக்கு இதுவரை 5,500 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் 216 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளதாகவும் கா்நாடக மாநில இயற்கை பேரிடா் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வட கா்நாடகம் மற்றும் கடலோர கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com