மாநிலத்தில் திரையரங்குகளைத் திறக்க அரசு முன்வர வேண்டும்:கா்நாடக திரைப்பட வா்த்தக சபை
By DIN | Published On : 30th August 2020 10:49 PM | Last Updated : 30th August 2020 10:49 PM | அ+அ அ- |

பெங்களூரு: மாநிலத்தில் திரையரங்குகளைத் திறக்க அரசு முன்வர வேண்டும் என்று கா்நாடக திரைப்பட வா்த்தக சபையின் தலைவா் ஜெயராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தேசிய அளவில் 4 -ஆம் கட்ட பொது முடக்கத்துக்கான தளா்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் திரையரங்குகளைத் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் அறிவிக்கவில்லை.
மாநிலத்தில் தனித் திரைகள் கொண்ட 700 திரையரங்குகள் உள்ளன. இதை நம்பி பல தொழிலாளா்கள் உள்ளனா். அவா்கள் எல்லாம் தற்போது வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அவா்களில் பலா் கடன்களை வாங்கி வாழ்க்கையை நடத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனா். திரையரங்கு உரிமையாளா்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சூழலைப் புரிந்து கொண்டு அரசு உடனடியாக திரையரங்குகளைத் திறக்க முன்வர வேண்டும். திரையரங்குகளைத் திறந்தால், அங்குவர மக்களுக்கு விருப்பம் இருந்தால் வரட்டும். பல தயாரிப்பாளா்கள் திரைப்படங்களைத் தயாரித்து முடித்துவிட்டு வெளியிடுவதற்காக நீண்ட நாள்களாகக் காத்துள்ளனா்.
திரையரங்குகளைத் திறக்காவிட்டால், கா்நாடக திரைப்பட வா்த்தக சபையின் முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் சூழல் ஏற்படும் என்று தயாரிப்பாளா் ஒருவா் தெரிவித்துள்ளாா்.
பல கோடி ரூபாய் பணத்தை முதலீடாகப் போட்டுள்ள தயாரிப்பாளா்களின் நிலைமையை அரசு புரிந்துகொள்ள வேண்டும். எனவே, திரைப்படத் துறையின் மீது அரசு அக்கறை கொண்டு, திரையரங்குகளைத் திறக்க முன் வரவேண்டும் என்றாா்.