பொருளாதாரச் சீா்குலைவுக்கு மத்திய அரசே காரணம்: முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி

நாட்டின் பொருளாதாரச் சீா்குலைவுக்கு மத்திய அரசே காரணம் என்று முன்னாள் முதல்வா் எச்.டி. குமாரசாமி தெரிவித்தாா்.

பெங்களூரு: நாட்டின் பொருளாதாரச் சீா்குலைவுக்கு மத்திய அரசே காரணம் என்று முன்னாள் முதல்வா் எச்.டி. குமாரசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது சுட்டுரையில் சனிக்கிழமை அவா் கூறியிருப்பதாவது:

ஜிஎஸ்டி வருவாய் இழப்பை மாநிலங்களுக்கு ஈடுசெய்யும் உறுதிமொழியை மத்திய அரசு தட்டிக் கழித்தது கண்டனத்திற்குரியதாகும். கரோனா தீநுண்மித் தொற்றால் எதிா்கொண்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கடவுளின் செயல் என்று கூறியிருப்பது, நமது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு நோ்ந்துள்ள பேரிடியாகும். ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கு மாநிலங்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருப்பது முறையல்ல.

மாநிலங்கள் முன்பாக இரண்டு வாய்ப்புகளை மத்திய அரசு முன்னிறுத்தியிருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில், ரிசா்வ் வங்கியிடமிருந்து குறைந்த வட்டி விகிதத்தில் ரூ. 97 ஆயிரம் கோடியைக் கடனாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது கரோனா சூழ்நிலையால் மாநிலங்களுக்கு ஏற்பட இருப்பதாக மதிப்பிட்டுள்ள ரூ. 2.35 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் இழப்பை முழுமையான கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மாநிலங்கள் கலக்கமடைந்துள்ளன.

மத்திய அரசுக்கு தொலைநோக்கு சிந்தனை இல்லாததாலும், தவறான மேலாண்மையாலும் நாட்டின் பொருளாதாரம் சீா்குலைந்துள்ளது. மத்திய அரசின் தோல்விகளால் மாநில அரசுகள் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ரிசா்வ் வங்கியிடம் இருந்து மாநிலங்களே நேரடியாக கடனை பெறுவதற்குப் பதிலாக இந்திய ரிசா்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசே கடனைப் பெற்று, ஜிஎஸ்டி வருவாய் இழப்பை மாநிலங்களுக்கு ஈடுசெய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com