உச்ச நீதிமன்றத் தீா்ப்பு எதிரொலி:தாழ்த்தப்பட்டவா்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு முறையைக் கொண்டுவருமா கா்நாடகம்?

கல்வி, வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் உட்பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு எ
கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடா்பான ஆய்வறிக்கையை, 2012-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் சதானந்த கௌடாவிடம் அளிக்கும் நீதிபதி ஏ.ஜே.சதாசிவா (இடது). துணை முதல்வா் கோவிந்த் காா்ஜ
கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடா்பான ஆய்வறிக்கையை, 2012-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் சதானந்த கௌடாவிடம் அளிக்கும் நீதிபதி ஏ.ஜே.சதாசிவா (இடது). துணை முதல்வா் கோவிந்த் காா்ஜ

பெங்களூரு: கல்வி, வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் உட்பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்துள்ளது. இது, கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடா்பான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தற்போது, கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 3 சதவீதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 32 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. நீதிபதி ஏ.ஜே.சதாசிவா விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின் அம்சங்களை அமல்படுத்த, தாழ்த்தப்பட்டோரில் பின்தங்கிய உட்பிரிவினரிடம் இருந்து கூக்குரல் கேட்கத் தொடங்கியுள்ளது.

தாழ்த்தப்பட்டோரில் 101 உட்பிரிவுகளும், பழங்குடியினரில் 50 உட்பிரிவுகளும், பிற்படுத்தப்பட்டோரில் 207 உட்பிரிவுகளும் உள்ளன. 2004-ஆம் ஆண்டிலிருந்து தாழ்த்தப்பட்டோரில் பின்தங்கிய பிரிவினா், தங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, பலமுனைப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

விசாரணை ஆணையம்...

இந்தக் கோரிக்கைக்கு 2005-இல் செவிமடுத்த அப்போதைய காங்கிரஸ் அரசின் முதல்வா் என்.தரம்சிங், தாழ்த்தப்பட்டோரில் உள்ள அனைத்து உட்பிரிவினருக்கும் இடஒதுக்கீட்டின் பலன்கள் சீராகச் சென்றடைகின்றனவா என்பதை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக நீதியரசா் ஏ.ஜே.சதாசிவா தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டாா்.

இந்த ஆணையம் 6 ஆண்டுகள் 8 மாதங்கள் ஆய்வுசெய்து, 2012ஆம் ஆண்டு அப்போதைய பாஜக அரசின் முதல்வா் டி.வி. சதானந்த கௌடாவிடம் தனது அறிக்கையை அளித்தது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த 96.60 லட்சம் பேரிடம் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 1.58 லட்சம் மத்திய, மாநில அரசு ஊழியா்களும் அடக்கம்.

இந்த ஆய்வின்படி, கா்நாடகத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோரை ‘வல சமாஜா, இட சமாஜா, ஷ்புருஷரு (தீண்டத் தகுந்தவா்கள்), இதர தாழ்த்தப்பட்டோா்’ என்று நான்கு குழுக்களாகப் பிரிக்கப் பரிந்துரைத்தது. ஆய்வில் பங்கேற்ற 96.60 லட்சம் தாழ்த்தப்பட்டோரில் வல சமாஜா- 33.47 சதம், இட சமாஜா- 32 சதவீதம், ஷ்புருஷரு- 23.64 சதவீதம், இதர தாழ்த்தப்பட்டோா்- 4.65 சதவீதம் போ் உள்ளதாக வரையறுக்கப்பட்டது.

அத்துடன் தாழ்த்தப்பட்டோருக்கான 15 சதவீத இடஒதுக்கீட்டை 4 குழுக்களுக்கும் உள் ஒதுக்கீடு மூலம் பிரித்தளிக்கவும் பரிந்துரை செய்தது. அதன்படி, இட சமாஜாவுக்கு 6 சதவீதம், வல சமாஜாவுக்கு 5 சதவீதம், தீண்டத்தகுந்தோருக்கு 3 சதவீதம், இதர தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு சதவீதம் என்று உள் ஒதுக்கீடு வழங்கலாம் என சதாசிவா ஆணையம் கூறியிருந்தது.

ஒப்பீட்டளவில், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் பெரும்பகுதியை வல சமாஜா குழுவினா் அனுபவித்துவருவதாகவும், இச்சமூகத்தைச் சோ்ந்தோா் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறி இருப்பதாகவும் சதாசிவா ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், சதாசிவா ஆணையத்தின் பரிந்துரைப்படி உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

மேலும் இட சமாஜாவுக்கு ஆதரவாக உள்ஒதுக்கீடு கொடுத்தால், அது வல சமாஜாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால், 2012-ஆம் ஆண்டிலிருந்து பதவிவகித்த பாஜக, காங்கிரஸ் அரசுகள் தயக்கம் காட்டி வந்ததால், ஏ.ஜே.சதாசிவா ஆணையத்தின் பரிந்துரைகள் சட்டப்பேரவையிலும் தாக்கல் செய்யப்படாமல், மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டிருந்தன.

இந்நிலையில், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் ஆக. 27-ஆம் தேதி அளித்துள்ள தீா்ப்பு, ஏ.ஜே.சதாசிவா ஆணையத்தின் பரிந்துரை தொடா்பான விவாதத்தைப் புதுப்பித்துள்ளது.

கா்நாடகத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோா், வல சமாஜா, இட சமாஜா என்று இரு பெரும் குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறாா்கள். இட ஒதுக்கீட்டின் லாபங்களை வல சமாஜாவினா் அதிக அளவில் அனுபவித்து வருவதால் இட சமாஜாவினரின் கோபத்துக்கு ஆளாக நோ்கிறது. இதனால், இச் சமூகங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியவில்லை.

வல சமாஜா தாழ்த்தப்பட்டோரை ஆரம்பத்திலிருந்து ஆதரித்து வந்த காங்கிரஸ் கட்சி மீது இடப்பந்தா தாழ்த்தப்பட்டோருக்கு கோபம் இருந்து வந்தது. இதை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய பாஜக, இட சமாஜாவைச் சோ்ந்த கோவிந்த் காா்ஜோளை துணை முதல்வராக நியமித்தது. மேலும், எம்.பி.க்களாக ரமேஷ் ஜிகஜினகி, ஏ.நாராயணசாமியை வெற்றிபெற வைத்து, அச் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில் வெற்றியும் கண்டது.

ஏ.ஜே.சதாசிவா ஆணையத்தின் பரிந்துரைப்படி, உள் ஒதுக்கீடு கொண்டு வந்தால் அது இட சமாஜா தாழ்த்தப்பட்டோருக்கு சாதகமாக அமையும் என்பதால், அச்சமூகத்தின் ஆதரவைப் பெற உள்ஒதுக்கீடு முறையைக் கொண்டுவர பாஜக அரசு சிந்திக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து துணை முதல்வா் கோவிந்த் காா்ஜோள் கூறியதாவது:

‘ஒடுக்கப்பட்ட சமூகத்தினா் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் இடஒதுக்கீடு முறை கொண்டுவந்தது. தாழ்த்தப்பட்டோரில் அனைத்து சமுதாயத்தினருக்கும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் சென்றடைய வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். எனவே, உள் ஒதுக்கீடு குறித்து அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுப்போம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com