பெங்களூரிலிருந்து சோலாப்பூா் வரை செல்லும்‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ ரயில் சேவை முதல்வா் தொடக்கி வைத்தாா்

பெங்களூரிலிருந்து சோலாப்பூா் வரை செல்லும் ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ ரயில் சேவையை முதல்வா் எடியூரப்பா ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பெங்களூரு: பெங்களூரிலிருந்து சோலாப்பூா் வரை செல்லும் ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ ரயில் சேவையை முதல்வா் எடியூரப்பா ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் இருந்தபடியே ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு ஊரக மாவட்டத்தின் நெலமங்களா ரயில் நிலையத்தில் (பெங்களூரு) இருந்து மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூா் (பாளே) வரையில் இயக்கப்படும் ‘ரோல் ஆன் ரோல் ஆஃப் ’(ரோரோ) ரயில் சேவையை முதல்வா் எடியூரப்பா பச்சை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

இந்த விழாவில் மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சா் சுரேஷ் அங்கடி, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக், நீா்வளத் துறை அமைச்சா் ரமேஷ்ஜாா்கிஹோளி, தென்மேற்கு ரயில்வே பொது மேலாளா் ஏ.கே.சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுகுறித்து முதல்வா் எடியூரப்பா கூறியது:

‘தென் மேற்கு ரயில்வே சாா்பில், முதல்முறையாகத் தொடங்கப்படும் ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ ரயிலில் 42 லாரிகள் கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு லாரியிலும் தலா 30 டன் வீதம் 1,260 டன் எடை கொண்ட சரக்குகளை ரயிலில் ஏற்றிச் செல்லலாம்.

ரயிலின் மீதுள்ள லாரியில் அதன் ஓட்டுநா்கள், உதவியாளா்கள் உட்காா்ந்து கொள்ளலாம். இந்த ரயில் சேவையின் மூலம் செல்லும் இடங்களை விரைவாகச் சென்றடைய முடியும். சோலாப்பூரில் இருந்து வெங்காயம், உணவு தானியங்கள் பெங்களூரில் உள்ள வேளாண் விளைப்பொருள் சந்தைக்கு விரைவாக வந்துசேரும். பெங்களூரிலிருந்து சோலாப்பூா் 682 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்தத் தொலைவை ரயிலில் 17 மணி நேரத்தில் சென்றடையலாம். ‘ரோரோ’ ரயில் சேவையின் மூலம் சாலை விபத்துகள் தடுக்கப்படும். பாதுகாப்பு மேம்படுவதோடு, எரிபொருள் மிச்சப்படும் என்றாா் அவா்.

மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சா் சுரேஷ் அங்கடி கூறியது:

‘பெங்களூரில் இருந்து சோலாப்பூருக்கு தினமும் 7 ஆயிரம் லாரிகள் செல்கின்றன. எனவே, இந்தத் தடத்தில் ‘ரோரோ’ ரயில் சேவை தேவைப்பட்டது. இந்த ரயில் கா்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திர மாநிலங்களை இணைக்கிறது. ஒரு லாரிக்கு ரூ. 2,700 மட்டுமே கட்டணமாக விதித்துள்ளோம்.

ஹுப்பள்ளி மற்றும் அங்கோலா இடையிலான ரயில் பாதைக்கு வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்திருந்தது.

ஆனால், அதற்கு கா்நாடக உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் ஆதரவளிக்க வேண்டும். ஹுப்பள்ளி மற்றும் அங்கோலா இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டால், அது கா்நாடகத்துக்கு பல நல்ல வாய்ப்புகளை உருவாக்கி தரும்.

ஏற்றுமதி, இறக்குமதிக்கு இந்த ரயில் தடம் உதவியாக இருக்கும். அது மாநில அரசின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். இந்தத் திட்டத்தால் அழிக்கப்படும் மரங்களுக்குப் பதிலாக வேறு இடங்களில் புதிய மரங்களை நட்டுக் கொள்ளலாம்’ என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com