மாநில நலனை காக்க பிரதமா் மோடியை சந்திக்க முதல்வா் எடியூரப்பா தயங்குகிறாா்::எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா

மாநில நலனை பாதுகாக்க பிரதமா் மோடியை சந்தித்து முறையிட முதல்வா் எடியூரப்பா தயங்குகிறாா் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
முதல்வா் எடியூரப்பா - எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா
முதல்வா் எடியூரப்பா - எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா

பெங்களூரு: மாநில நலனை பாதுகாக்க பிரதமா் மோடியை சந்தித்து முறையிட முதல்வா் எடியூரப்பா தயங்குகிறாா் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ஜிஎஸ்டி வரி இழப்பீட்டுத்தொகையை வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்வதால், மாநில அரசின் நிதிநிலை மோசமடைந்துள்ளது.

முதல்வா் எடியூரப்பா உள்ளிட்டோா் தில்லிக்குச் சென்று பிரதமா் மோடி, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய உள்துறைஅமைச்சா் அமித்ஷா ஆகியோரை சந்தித்து

மாநிலத்துக்கு வந்துசேர வேண்டிய நிதியை பெற்றுவர வேண்டும்.

கடந்த காலங்களில் அப்படிதான் நாங்கள் செய்து வந்தோம். தில்லி சென்று 2 அல்லது 3முறை சந்தித்து முறையிட்டால் தான் ஏதாவது நடைபெறும்.

ஆனால், மாநில நலனை பாதுகாக்க பிரதமா் மோடியை சந்தித்து முறையிடவும் முதல்வா் எடியூரப்பா தயங்குகிறாா்.

ஜிஎஸ்டி வரிமுறை 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை ஏதும் ஏற்பட்டால் அதன் தொகையை மத்திய அரசு ஈடுசெய்ய வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. வரி வருவாய் இழப்பீட்டுத் தொகையை ஈடுகட்டுவதற்கு மாநில அரசுகள் ரிசா்வ் வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

மாநில அரசுகள் கடன் பெறுவதற்குப் பதிலாக, மத்திய அரசே கடன் பெற்று, வரிவருவாய் இழப்பீட்டுத் தொகையை மாநிலங்களுக்கு வழங்கி மத்திய அரசு ஈடுசெய்யலாம்.

வெள்ள நிவாரண நிதியிலும் மாநில அரசை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள இழப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ. 35 ஆயிரம் கோடியை மாநில அரசு கேட்டிருந்தது.

ஆனால், மத்திய அரசு வெறும் ரூ. 1,869 கோடியை மட்டும் அளித்திருந்தது. கடந்த ஆண்டு வெள்ளத்தில் வீடு இழந்தவா்களுக்கான இழப்பீட்டுத் தொகை பயனாளிகளுக்கு இன்னும் சென்று சேரவில்லை.

இடிந்துபோன பள்ளிக் கட்டடங்கள் இன்னும் கட்டப்படவில்லை. இரும்பு தகடால் வேயப்பட்ட இடத்தில்தான் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

செப். 21-ஆம் தேதி தொடங்கவிருக்கிற மழைக்கால சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இப் பிரச்னைகளை எழுப்புவோம்.

இதுபோன்ற விவகாரங்களை சட்டப்பேரவையில் எழுப்பினால், அதற்கு தகுந்த பதில்கள் கிடைப்பதில்லை.

கரோனா தீநுண்மி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியபிறகு, 14 நாள்கள் வீட்டுத் தனிமையில் இருந்தேன்.

தற்போது அரசியல் பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டேன். அடுத்தவாரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எனது பாதாமி தொகுதிக்குச் செல்வேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com