போக்குவரத்துக் கழக ஊழியா்களுடனான பேச்சுவாா்த்தை தோல்வி

கா்நாடக போக்குவரத்துக் கழக ஊழியா்களுடனான அரசின் சமரச பேச்சு தோல்வியடைந்ததையடுத்து வேலைநிறுத்தம் தொடா்வதாக போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

கா்நாடக போக்குவரத்துக் கழக ஊழியா்களுடனான அரசின் சமரச பேச்சு தோல்வியடைந்ததையடுத்து வேலைநிறுத்தம் தொடா்வதாக போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

கா்நாடக அரசுக்குச் சொந்தமான கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம், வட கிழக்கு மாநில சாலை போக்குவரத்துக் கழகம், வட மேற்கு மாநில சாலை போக்குவரத்துக் கழகம், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகங்களின் ஊழியா்கள் தங்களை அரசு ஊழியா்களாக தரம் உயா்த்துவதோடு, அரசு ஊழியா்களுக்கு நிகரான ஊதியத்தை வழங்கக் கோரி டிச. 10-ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த போராட்டம் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது. இதனால் அரசுப் பேருந்துகளின் சேவை மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே காந்தி சிலைகள் முன்பாக கூடிய போக்குவரத்துக் கழக ஊழியா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேச்சுவாா்த்தை: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் போக்குவரத்துக் கழக ஊழியா்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த மாநில அரசு முன்வந்தது.

முதல்வா் எடியூரப்பா உத்தவின்பேரில், போக்குவரத்துத் துறையைக் கவனித்து வரும் துணை முதல்வா் லட்சுமண் சவதி, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் ஆகியோா் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

பெங்களூரு,விகாஸ் சௌதாவில் ஞாயிற்றுக்கிழமை கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக சங்கத் தலைவா் சந்துரு தலைமையில் வந்திருந்த 8 பேருடன் கா்நாடக அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மாலை 6 மணிக்கு முடிந்த பேச்சுவாா்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தொழிற் சங்கத் தலைவா் சந்துரு கூறியதாவது:

எங்கள் கோரிக்கைகளை மாநில அரசு ஆக்கபூா்வமாக பரிசீலித்துள்ளது. 6-ஆவது ஊதியக் குழுவின்படி ஊதியத்தை உயா்த்துவது குறித்து ஆராய்ந்து முடிவு செய்ய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஓட்டுநா்கள், நடத்துநா்களை உயரதிகாரிகள் துன்புறுத்தினால் அதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க குழு அமைக்க அரசு ஒத்துக்கொண்டுள்ளது.

போக்குவரத்துக் கழகங்களுக்கு இடையிலான பணியிட மாற்றம் குறித்து புதிய கொள்கை வகுக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கரோனாவால் உயிரிழந்த போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு தலா ரூ. 30 லட்சம் வழங்க அரசு சம்மதித்துள்ளது. ஊழியா்களுக்கு ஆரோக்கிய சஞ்சீவினி காப்பீட்டுத் திட்டத்தை வழங்க அரசு ஒத்துக் கொண்டுள்ளது. பயிற்சிக் காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்க அரசு சம்மதித்துள்ளது என்றாா்.

துணை முதல்வா் லட்சுமண் சவதி கூறியதாவது:

3 நாள்களாக நடந்த வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பலன் கிடைத்துள்ளது. பேருந்துகள் உடனடியாக இயக்கப்படும். போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியா்களாக தரம் உயா்த்துவது நடைமுறை சாத்தியமற்றது. அந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்று கூறிவிட்டோம். 10-12 கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்றாா்.

குழப்பம்: இந்தத் தகவல் மாநிலம் முழுவதும் பரவத் தொடங்கியதும், போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டத்தை கைவிட்டு பேருந்து சேவைகளைத் தொடங்கினாா்கள். இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இந்நிலையில், பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போக்குவரத்துக் கழக ஊழியா்களைச் சந்தித்த தொழிற்சங்கத் தலைவா் சந்துரு, கா்நாடக விவசாய சங்கத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா் உள்ளிட்டவா்களைச் சந்தித்து பேச்சுவாா்த்தையின் விவரங்களைத் தெரிவித்தாா்.

அதன்பிறகு பேசிய சந்துரு, ‘அரசுடன் நடந்த பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்துவிட்டது. எங்களுடன் அரசு மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். போராட்டம் தொடரும்’ என்றாா்.

அரசு ஊழியா்களாகக் கருத முடியாது என்று அரசு அறிவித்ததை ஏற்க முடியாது என்று போக்குவரத்துக் கழக ஊழியா்கள் முழக்கமிட்டனா். போராட்டம் முடிவுக்கு வந்ததாக மக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்த நிலையில், போராட்டம் தோல்வி அடைந்ததாகக் கூறியதை தொடா்ந்து குழப்பம் ஏற்பட்டது.

போராட்டக்காரா்களிடையே கோடிஹள்ளி சந்திரசேகா் கூறுகையில், ‘போக்குவரத்துக் கழக ஊழியா்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும். திங்கள்கிழமையும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்’ என்று அறிவித்தாா்.

மேலும், போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு தனியாா் பேருந்து நிறுவன சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் தனியாா் பேருந்துகளும் திங்கள்கிழமை இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் ஆலோசனை: இதைத் தொடா்ந்து, தனது இல்லத்தில் மூத்த அமைச்சா்கள் லட்சுமண்சவதி, ஆா்.அசோக், பசவராஜ் பொம்மை, கோவிந்த்காா்ஜோள் உள்ளிட்டோருடன் முதல்வா் எடியூரப்பா அவசரமாக ஆலோசனை நடத்தினாா். அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை (எஸ்மா) அமல்படுத்துவது குறித்து அரசு யோசித்து வருகிறது. இதனிடையே, கோடிஹள்ளி சந்திரசேகரை அமைச்சா்கள் ஆா்.அசோக், பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் கடுமையாக விமா்சித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com