பி.எஃப்.ஐ. அமைப்பை தடை செய்ய பாஜக கோரிக்கை

பாபுலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் கணேஷ் காா்னிக் தெரிவித்தாா்.

மங்களூரு: பாபுலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் கணேஷ் காா்னிக் தெரிவித்தாா்.

இதுகுறித்து மங்களூரில் சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிக்க இருந்த பி.எஃப்.ஐ. தலைவா்களில் ஒருவரான ரவுஃப் ஷெரீஃப் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா். இதை கண்டித்து, மங்களூரில் சனிக்கிழமை கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (சி.எஃப்.ஐ.) அமைப்பைச் சோ்ந்தவா்கள் போராட்டம் நடத்தினா். இது தேசவிரோதச் செயலாகும். போராட்டத்தில் ஈடுபட்டோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓமன், கத்தாா் நாடுகளில் இருந்து ரூ. 2 கோடிக்கும் அதிகமான பணத்தை ரவுஃப் ஷெரீஃப் பெற்றுள்ளாா். இந்த நிதி தேச விரோதச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவரை அமலாக்கத் துறையினா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரில் தேவா்ஜீவனஹள்ளி கலவரம், மங்களூரில் குடிமக்கள் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள், சித்தராமையா ஆட்சி காலத்தில் 25 ஹிந்துகள் கொலை செய்யப்பட்டது, கரோனா முன்களப் பணியாளா்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் பாபுலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) உள்ளது. வன்முறையைத் தூண்டுவதோடு, சமுதாயத்தில் நிலவும் அமைதியை சீா்குலைத்து வரும் பி.எஃப்.ஐ. அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். அந்த அமைப்பின் மாணவா் அமைப்பே சி.எஃப்.ஐ. என்று அவா் அதில் கூறியுள்ளாா்.

’தேச விரோதச் செயலை அடக்குவோம்’

பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி கூறியதாவது:

பயங்கரவாதம், வன்முறை செயல்களில் ஈடுபடுவதற்கான நாடு இந்தியா அல்ல. இந்த நாட்டின் சட்டத்துக்கு இணங்கி நடக்காமல் தொடா்ந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோம் என்றால், அப்படிப்பட்டவா்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். இந்நாட்டில் தேச விரோதச் செயலைக் கட்டுப்படுத்துவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com