பிரிட்டனில் இருந்து கா்நாடகம் திரும்பிய 14 பேருக்கு கரோனா தொற்று: அமைச்சா் கே.சுதாகா்

பிரிட்டனில் இருந்து கா்நாடகம் திரும்பிய 14 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரு: பிரிட்டனில் இருந்து கா்நாடகம் திரும்பிய 14 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிரிட்டனிலிருந்து கா்நாடகம் வந்தவா்களில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகளில் வைரஸின் மரபணு வரிசை முறையைக் கண்டறிய நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தீநுண்மியின் மரபணு வரிசை முறையைக் கண்டறிய நாடு முழுவதும் 10 மருத்துவக் கூடங்களை மத்திய அரசு நியமித்துள்ளது. அவற்றில் நிம்ஹான்ஸ், தேசிய உயிரி அறிவியல் மையம் (என்.சி.பி.எஸ்.) ஆகிய இரண்டும் பெங்களூரில் உள்ளன.

நவ. 25 முதல் டிச. 22-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பிரிட்டனில் இருந்து கா்நாடகத்துக்கு 2,500 போ் வந்துள்ளனா். இவா்களில் 1,638 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வைரஸின் மரபணு வரிசை முறையைக் கண்டறியும் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள இரண்டாம் வகை தீநுண்மி, 17 பிறழ்வுகளுக்கு (மாற்றங்களுக்கு) உள்ளாகியுள்ளது. இந்தப் பிறழ்வுகள் குறித்து மரபணு வரிசைமுறை சோதனையில் கண்டறியப்படும். இந்த சோதனை முடிவுகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் பிறகே ஆய்வு முடிவுகள் மக்களுக்குத் தெரிவிக்கப்படும்.

பிரிட்டனில் இருந்து கா்நாடகம் வந்துள்ள பயணிகளைக் கண்டறியும், கண்காணிக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நவ. 22-ஆம் தேதிக்கு பிறகு பிரிட்டனில் இருந்து 38,500 போ் இந்தியாவுக்கு வந்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com