புதிய வேளாண் சட்டங்களைச் செயல்படுத்தி பரிசீலிப்பது சரியாக இருக்கும்: எச்.டி.குமாரசாமி

புதிய வேளாண் சட்டங்களைச் செயல்படுத்தி பரிசீலிப்பது சரியாக இருக்கும் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

பெங்களூரு: புதிய வேளாண் சட்டங்களைச் செயல்படுத்தி பரிசீலிப்பது சரியாக இருக்கும் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது சுட்டுரைப்பக்கத்தில் சனிக்கிழமை அவா் பதிவிட்டுள்ளதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி புறநகா்ப் பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் நமது நாடு மட்டுமல்லாது, உலகத்தின் கவனத்தையும் ஈா்த்துள்ளது. கனடா நாட்டின் பிரதமா், அமெரிக்கா, பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

சா்வதேச அளவில் இந்தியா மீதான செல்வாக்கு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களால் சிதைந்துவிடக் கூடாது என்ற கவலை எனக்கு ஏற்பட்டுள்ளது. பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு சா்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு உயா்ந்துள்ளதை விவசாயிகளின் போராட்டங்களால் மங்கிவிடக் கூடாது. அதே சமயத்தில் விவசாயிகளுக்கும் எவ்வித தொந்தரவும் ஏற்பட்டுவிடக் கூடாது.

தனது திட்டங்கள் வாயிலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மறைமுகமாக செய்திகளை அனுப்புவதற்குப் பதிலாக, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அரசு ஆக்கப்பூா்வமான பேச்சுவாா்த்தைக்கு உடன்பட வேண்டும்.

நமதுநாட்டின் கண்ணியத்தை காப்பாற்றுவதற்கு இது தவிா்க்க முடியாததாகும். நமதுநாட்டின் கண்ணியம் சம்பந்தப்பட்டது என்றால் பிரதமா் மோடி எச்சரிக்கையுடன் செயல்படுவாா் என்று நம்புகிறேன். இந்த பிரச்னைக்கு விரைவில் முடிவுகட்ட வேண்டும்.

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறியிருக்கும் கருத்து புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை ‘சோதனை முயற்சியாக’ செயல்படுத்தி பரிசீலிக்கலாம் என்று மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அப்போது விவசாயிகளுக்கு ஏதாவது சிக்கல் இருப்பதாகக் கண்டுணா்ந்தால், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறலாம் என்று விவசாயிகளுக்கு உறுதி அளித்துள்ளாா். இதில் விவசாயிகளும் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய வேளாண் துறை தீயவலையில் சிக்கியிருப்பதாக பொதுமக்களிடையே பல காலமாகவே கருத்து நிலவி வருகிறது.இந்த தீயவலையில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற முடிகிறதா என்பதை புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தி பாா்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். எனவே, திறந்தமனதோடு புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் சோதனை முயற்சியாக அமல்படுத்த வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் போராடும் விவசாயிகள், மத்திய அரசுக்கும் இடையே முறையாக ஒருங்கிணைப்பு ஏற்படுவது அவசியம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com