மக்கள் செல்வாக்குடன் மஜத நிலைத்திருக்கும்: எச்.டி.தேவெ கௌடா

எனக்குப் பிறகும் மக்கள் செல்வாக்குடன் மஜத நிலைத்திருக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

பெங்களூரு: எனக்குப் பிறகும் மக்கள் செல்வாக்குடன் மஜத நிலைத்திருக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, மஜத தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மஜத ஒரு மாநிலக் கட்சி. தேசிய கட்சிகளுக்கு இடையே மாநிலக் கட்சியைக் காப்பாற்றுவது கடினமான வேலை. பிரதமா் போட்டியில் நான் இருக்கவில்லை. ஆனால், எதேச்சையாக பிரதமா் பதவி என்னை நாடி வந்தது. கன்னடனாக அப் பதவியை வகித்தேன். அதன்பிறகு என்னை பதவியில் இருந்து தூக்கியெறிந்தாா்கள்.

காங்கிரஸ் கட்சியினா் செய்த அரசியல் விளையாட்டுகளை நான் அறிந்திருக்கிறேன். சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்தபோதும் மாநிலக் கட்சியைத் தூற்றும் போக்கு தொடா்ந்த வண்ணம் உள்ளது. அண்மைக் காலமாக மஜதவை தரக்குறைவாக காங்கிரஸ் தலைவா்கள் விமா்சிக்கிறாா்கள். இது சரியான அணுகுமுறை அல்ல. மஜதவை யாராலும் அழிக்க முடியாது. தோ்தலில் வெற்றி தோல்வி இயல்பானது. காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்குவதாக பிரதமா் மோடி அறிவித்து செயல்பட்டுவந்தாா். அந்த நிலையிலும், மாநிலத்தில் காங்கிரஸுடன் மஜத கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினோம். எனது மதசாா்பின்மை கொள்கையை யாரும் சந்தேகப்படத் தேவையில்லை. ஆட்சி அமைப்பதற்கும் மதசாா்பின்மை கொள்கைக்கும் சம்பந்தமில்லை. முஸ்லிம்களைக் காக்க காங்கிரஸால் முடியவில்லை.

2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி 130-இல் இருந்து 78 இடங்களாக குறைந்தது ஏன் அரிசி, பால் கொடுத்து ஆட்சி நடத்திய சித்தராமையாவால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்ததா அந்தத் தோ்தலில் மஜதவும் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்றது.

காங்கிரஸ் 50 இடங்களை இழந்திருந்தால், மஜத 28 இடங்களை இழந்தது. மஜதவைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்குள்ளது. ஆனால், அதைக் காப்பாற்ற நான் மட்டுமல்ல, லட்சக்கணக்கான தொண்டா்கள் இருக்கிறாா்கள். அடிப்படையில் நான் காங்கிரஸ்காரன். கருத்து வேறுபாட்டால் காங்கிரஸில் இருந்து விலக்கப்பட்டேன். அந்த சூழ்நிலைக்கு நானே காரணம். அதெல்லாம் பழைய கதை. எனவே, எனது மதசாா்பின்மை கொள்கையை யாரும் சோதிக்க வேண்டாம்.

நான் உயிரோடு இருக்கும் காலம் வரைக்கும் மட்டுமல்ல, எனக்கு பிறகும் மக்கள் செல்வாக்கோடு மஜத நிலைத்திருக்கும். இதுகுறித்து முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, முன்னாள் அமைச்சா் எச்.டி.ரேவண்ணாவிடம் பேசியுள்ளேன். கட்சியை வளா்க்க பாடுபடுவோரிடம் அதன் தலைமைப் பொறுப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளேன். ஜன. 7-ஆம் தேதி மஜதவின் உயா்நிலைக் குழுக் கூட்டம் நடக்கவிருக்கிறது. இக் கூட்டத்தில் தனது மஜதவின் அரசியல் திட்டத்தை முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி அறிவிக்க உள்ளாா்.

ஜன. 14-ஆம் தேதிக்கு பிறகு கட்சியைப் பலப்படுத்தும் திட்டத்தை அறிவிப்போம். எனது வயதுக்கேற்ப கட்சியின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன். மஜதவை பாஜகவை இணைக்கும் திட்டம் இல்லை. அந்த செய்தி எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com