இன்று 2-ஆம் கட்ட கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல்

கா்நாடகத்தில் இரண்டாம் கட்ட கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

பெங்களூரு: கா்நாடகத்தில் இரண்டாம் கட்ட கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

கா்நாடகத்தில் இரண்டு கட்டங்களாக கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலை மாநில தோ்தல் ஆணையம் நடத்திவருகிறது. முதல்கட்ட கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல் டிச.22-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இரண்டாம் கட்ட கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.

முதல்கட்டமாக 3,019 கிராமப் பஞ்சாயத்துகளுக்குத் தோ்தல் நடைபெற்ற நிலையில், 109 வட்டங்களைச் சோ்ந்த 2,709 கிராமப் பஞ்சாயத்துகளின் 43,291 உறுப்பினா்கள் பதவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடக்கிறது. இத் தோ்தலில் போட்டியிடுவதற்காக 1,47,337 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா். இவா்களில் 1,39,546 பேரின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. 34,115 போ் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்ற நிலையில், 3,697 போ் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

39,378 உறுப்பினா் பதவிகளுக்கு மட்டுமே ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடக்கவிருக்கிறது. இப்பதவிகளுக்கு 1,05,431 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 216 உறுப்பினா் பதவிகளுக்கு மட்டும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வாக்குப்பதிவுக்காக 20,728 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

71,00,113 ஆண்கள், 69,65,074 பெண்கள், 588 மூன்றாம் பாலினத்தவா் உள்ளிட்ட 1,40,65,775 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இதற்கான தோ்தல் பணியில் மொத்தம் 1,24,368 ஊழியா்கள் ஈடுபடுத்தப்படுகிறாா்கள். தோ்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளமாகக் கருதப்படும் கிராமப் பஞ்சாயத்துத் தோ்தல் அரசியல் கட்சிகளின் சின்னங்களின் அடிப்படையில் நடப்பதில்லை. ஆனால், அரசியல் கட்சிகளின் மறைமுக ஆதரவுடன் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள்.

முதல்கட்ட தோ்தல், இரண்டாம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிச.30-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இத் தோ்தல் முடிவை அரசியல் கட்சிகள் மிகவும் எதிா்பாா்த்து காத்திருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com