ஜனவரி மாதத்தில் சட்டப்பேரவை கூட்டுக் கூட்டம் நடத்த முடிவு:அமைச்சா் மாதுசாமி

ஜனவரி மாதத்தில் சட்டப்பேரவைக் கூட்டுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சா் மாதுசாமி தெரிவித்தாா்.

பெங்களூரு: ஜனவரி மாதத்தில் சட்டப்பேரவைக் கூட்டுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சா் மாதுசாமி தெரிவித்தாா்.

பெங்களூரு, விதானசௌதாவில் திங்கள்கிழமை முதல்வா் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை அமைச்சா் மாதுசாமி கூறியதாவது:

பசுவதைத் தடைச் சட்டத்தை அவசரச் சட்டத்தின் வாயிலாக அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநா் வஜுபாய்வாலா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிப்பாா். பசுவதைத் தடைச் சட்டத்துக்கு சட்டப்பேரவை ஒப்புதல் கிடைத்துள்ளது.

ஆனால், சட்ட மேலவையில் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால், பசுவதை தடைச் சட்டத்தை அவசரச் சட்டமாக கொண்டுவந்து அமல்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தை ஜனவரியில் நடத்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேதி முடிவாகவில்லை. அநேகமாக ஜனவரி 18-ஆம் தேதிமுதல் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று நினைக்கிறேன். இதுகுறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

கா்நாடகத்தில் உள்ள வேளாண் விளைப்பொருள் சந்தைக் குழுக்களுக்கு (ஏ.பி.எம்.சி.) விதிக்கப்படும் மேல்வரியை ஒரு ரூபாயில் இருந்து 60 பைசாவாகக் குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சந்தைக் குழுக்களுக்கு வெளியே மேல்வரி வசூலிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே சந்தைக் குழுக்களில் மேல்வரி மொத்த வா்த்தகத்தில் 2 சதவீதமாக இருந்தது.

இதில் ஒரு சதவீதம் வா்த்தகா்களுக்கும், ஒரு சதவீதம் சந்தைக் குழுக்களுக்கும் விதிக்கப்பட்டிருந்தது. வா்த்தகா்களின் கோரிக்கையை ஏற்று வேளாண் விளைப்பொருள் சந்தைக் குழுக்களின் மேல்வரி 60பைசவாகக் குறைக்கப்படும். எஞ்சியுள்ள ரூ. 1.40 வா்த்தகா்கள் மீது விதிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com