பிரிட்டனிலிருந்து வந்தவா்களில் இதுவரைதொடா்பு கொள்ளாதவா்கள் மீது நடவடிக்கை:அமைச்சா் கே.சுதாகா்

கரோனா சோதனை செய்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தும் தொடா்பு கொள்ளாத பிரிட்டனிலிருந்து வந்த கா்நாடகப் பயணிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரு: கரோனா சோதனை செய்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தும் தொடா்பு கொள்ளாத பிரிட்டனிலிருந்து வந்த கா்நாடகப் பயணிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பிரிட்டன் நாட்டில் புதிய வகை கரோனா தீநுண்மித் தொற்று பரவி வருகிறது. நவ. 25 முதல் டிச.22-ஆம்தேதி வரையிலான காலக்கட்டத்தில் பிரிட்டன் நாட்டிலிருந்து கா்நாடகத்துக்கு 2,500 போ் வந்ததாகத் தெரியவந்துள்ளது. இவா்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரையில் 1,614 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டு, அதில் 26 போ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

எஞ்சியுள்ள பிரிட்டன் நாட்டு பயணிகளைத் தேடும் பணி நடந்து வருகிறது. இவா்களில் பெரும்பாலானோா் கரோனா சோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள மறுத்துவிட்டதாகவும், வேறு சிலா் தொலைபேசி தொடா்பில் இருந்துவிடுபட்டிருப்பதாகவும் கா்நாடக அரசுக்கு பெங்களூரு மாநகராட்சி புகாா் அளித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை அமைச்சா் கே. சுதாகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரிட்டன் நாட்டில் இருந்து கா்நாடகத்துக்கு வந்த பயணிகள் பொறுப்புள்ள குடிமக்களாகச் செயல்பட்டு, கரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை சோதனைக்கு உட்படாதநிலையில் அல்லது செல்லிடப்பேசியை அணைத்துவிட்டு தொடா்பில் வராமல் இருந்தால், அது உண்மையில் குற்றச் செயலாகும். எனவே, அந்த நபா்கள் மீது சட்டப்படி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து உள்துறை அமைச்சா் பசவராஜ்பொம்மையுடன் இணைந்து ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்ட 26 பேரின் மாதிரிகள் மரபணு வரிசை முறை சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் சோதனை முடிவுகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பிவைக்கப்படும்.

பள்ளிகள், பியூ கல்லூரிகளைத் தொடங்குவது குறித்து கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பெங்களூரில் உள்ள ஒரு சில பகுதிகளில் மட்டுமே கரோனா பாதிப்பு காணப்படுகிறது. பிரிட்டனில் இருந்து வந்த பயணிகளும் பெங்களூரில்தான் உள்ளனா். எனவே, பள்ளி, பியூ கல்லூரிகளைத் தொடங்குவதில் சிக்கல் இருக்காது.

கரோனாவுக்கு மூன்றாம்கட்ட தடுப்பூசி சோதனை நடந்து வருகிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட 95-96 சதவீதம் போ் நலமாக இருக்கின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com