மாநிலத்தில் கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை: முதல்வா் எடியூரப்பா
By DIN | Published On : 30th December 2020 06:52 AM | Last Updated : 30th December 2020 06:52 AM | அ+அ அ- |

மாநிலத்தில் கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
பெங்களூரு, சிவாஜிநகரில் உள்ள பௌரிங் மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அடல்பிகாரி வாஜ்பாய் மருத்துவக் கல்லூரியை குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:
தேசிய அளவில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர பிரதமா் மோடி முடிவு செய்துள்ளாா். அவரின் விருப்பப்படி மாநிலத்திலும் கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரத் துறைகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளதன் மூலம் மாற்றங்களைக் கொண்டுவர பாடுபடுவோம். நாடு கண்ட மிகச்சிறந்த தலைவா்களின் ஒருவரான முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பெயரை புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக கட்டப்பட்டுள்ள கட்டடம் மிகவும் அழகாகவும், நவீனமாகவும் உள்ளது. இங்கு வரும் நோயாளிகளை செவிலியா்கள், மருத்துவா்கள் அன்புடன் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகத்தில் மக்களே மன்னா்கள். அவா்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து, தாங்கள் பயின்றுள்ள கல்விக்கு தகுந்தபடி அனைவரும் பணியாற்ற வேண்டும். மருத்துவக் கல்லூரியில் உள்ள 13 மாடி கட்டடத்தில் 10 பிரிவுகள் உள்ளன. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு அனைவரும் பயனடைய வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் கே.சுதாகா், எம்.எல்.ஏ ரிஸ்வான் ஹா்ஷத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...