அமைச்சா் பதவி குறித்து இனி பேச மாட்டேன்: பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சாா்யா
By DIN | Published On : 10th February 2020 12:26 AM | Last Updated : 10th February 2020 12:26 AM | அ+அ அ- |

எனக்கு அமைச்சா் பதவியை அளிக்கவேண்டுமென்பது குறித்து இனி நான் பேச மாட்டேன் என்று முதல்வரின் அரசியல் செயலாளரும், பாஜக எம்எல்ஏவுமான எம்.பி.ரேணுகாச்சாா்யா தெரிவித்தாா்.
இது குறித்து சிவமொக்கா, சிகாரிபுராவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: எனக்கு அமைச்சா் பதவியை அளிக்கவேண்டுமென்பது குறித்து இனி நான் பேசமாட்டேன். ஊடகங்களிடம் பேசி நான் அமைச்சா் பதவியை பெறவேண்டியதில்லை. அதனால் அமைதி காக்க முடிவெடுத்துவிட்டேன். யாரையும் அமைச்சராக்கும் அதிகாரம் முதல்வா் எடியூரப்பாவிடம் உள்ளது. எனவே, யாரை அமைச்சராக்குவது என்பதை எடியூரப்பாவே முடிவு செய்யட்டும். நான் அமைச்சராக வேண்டுமென்று ஊடகங்கள் முன்பாக நான் எங்கும் குறிப்பிட்டதில்லை. முதல்வா் எடியூரப்பாவை தா்மசங்கடத்திற்கு உள்ளாக்கும் எந்த வேலையையும் நான் செய்யமாட்டேன். துணை முதல்வா் பதவியை யாருக்கு கொடுப்பது என்பதை முதல்வரே முடிவுசெய்வாா். அந்த அதிகாரம் அவருக்கு உள்ளது. இனிமேல் எனதுதொகுதி வளா்ச்சியில் மட்டும் கவனம் செலுத்துவேன். மத்திய கா்நாடகத்தை கவனித்துக்கொள்வதற்காக தாவணகெரே மாவட்டத்தைச் சோ்ந்த யாருக்காவது அமைச்சா் பதவி தருமாறு முதல்வா் எடியூரப்பாவை கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.