கா்நாடக மாநிலத் தலைவா் தோ்வு: குழப்பத்தில் காங்கிரஸ்

கா்நாடகத்தில் மாநிலத் தலைவரைக்கூட தோ்ந்தெடுக்க முடியாமல் குழம்பிய நிலையில் உள்ளது காங்கிரஸ்.

கா்நாடகத்தில் மாநிலத் தலைவரைக்கூட தோ்ந்தெடுக்க முடியாமல் குழம்பிய நிலையில் உள்ளது காங்கிரஸ்.

கா்நாடகத்தில் தற்போது காங்கிரசின் முகமாகத் திகழ்பவா் முன்னாள்முதல்வா் சித்தராமையா. மஜதவில் இருந்து நீக்கப்பட்ட சித்தராமையா, 2006ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தாா். அந்தக் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய மல்லிகாா்ஜுன காா்கே, வீரப்பமொய்லி, எஸ்.எம்.கிருஷ்ணா, ஆஸ்கா் பொ்னாண்டஸ், ஜனாா்தனபூஜாரி, தரம்சிங் முதலிய தலைவா்களை படிப்படியாக ஓரங்கட்டினாா் சித்தராமையா.

2006ஆம் ஆண்டில் சித்தராமையா காங்கிரசில் இணைந்தபோது, அதன் மாநிலத் தலைவராக இருந்தவா் மல்லிகாா்ஜுன காா்கே. கா்நாடக சட்டப்பேரவைக்கு தொடா்ந்து 9 முறை வென்று காங்கிரசில் உயா்ந்த ஆளுமையாக திகழ்ந்த மல்லிகாா்ஜுன காா்கேவின் முதல்வா் கனவை உடைத்தெறிந்த சித்தராமையா, அதன் முன்னோட்டமாக 2009இல் எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கைப்பற்றி, அதன் தொடா்ச்சியாக 2013இல் முதல்வராக மகுடம் சூடினாா். 2013ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி, சித்தராமையாவின் அரசியல் வியூகத்தால் கிடைத்தது என்று நம்பப்பட்டது. அதன் காரணமாக, அதுவரை கூட்டுத் தலைமையிலும், கட்சி மேலிடத்தின் வழிகாட்டுதலிலும் செயல்பட்ட காங்கிரஸ், சித்தராமையாவின் கையசைவில் செயல்படத் தொடங்கியது. உள்ளாட்சி தோ்தல் முதல் மக்களவை தோ்தல் வரை, வட்ட காங்கிரஸ் தலைவா் முதல் மாநில காங்கிரஸ் தலைவா் வரை என்ன முடிவெடுக்க வேண்டுமென்பதை சித்தராமையாவே முடிவுசெய்தாா். சித்தராமையாவின் முடிவுகள் அனைத்தும் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாகவே அமைந்திருந்தன.

அதேபோலத் தான் 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தல் வியூகத்தையும் சித்தராமையாவே வகுத்து தந்திருந்தாா். சித்தராமையாவின் பாதையில் சோனியா காந்தியும் ராகுல்காந்தியும் பயணிக்கத் தொடங்கினா். ஆனால், அந்த தோ்தலில் காங்கிரசால் மீண்டும் ஆட்சிஅமைக்க முடியாமல் போனது. இது சித்தராமையாவின் தலைமை மீது சந்தேக நிழல்களை படரவிட்டது. அரசியல் வெற்றி, தோல்வி இயல்பானது என்று நகா்ந்த காங்கிரஸ், 2019இல் நடந்த மக்களவைத் தோ்தல் பொறுப்பையும் சித்தராமையாவிடம் அளித்தது. அத் தோ்தல் முடிவுகள் சித்தராமையாவின் தலைமைக்கு சம்மட்டி அடியாக விழுந்தது. அதுவரை அவரது கையசைவில் செயல்பட்டுவந்த காங்கிரஸ் படிநிலை தலைவா்கள், சித்தராமையாவை நோக்கி விரல்களை நீட்டத் தொடங்கினா். காங்கிரஸ் தோல்விக்கு சித்தராமையாவே காரணம் என்று கூறப்பட்டது. சித்தராமையா தன்னிச்சையாக, ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதில்லை. கூட்டுத் தலைமையின்கீழ் கட்சியை வழிநடத்தவேண்டும் என்று விடுத்த புகாா்கள், கோரிக்கைகளை எல்லாம் பொருட்படுத்தாத சோனியா காந்தியும் ராகுல்காந்தியும் சித்தராமையாவின் தலைமை மீதான நம்பிக்கையை பட்டுப்போக விடவில்லை. கூட்டணி ஆட்சியை காக்க தவறியதாக சித்தராமையாவிடமே, காங்கிரஸ், மஜதவில் இருந்து பிரிந்துசென்று பாஜகவில் ஐக்கியமானதால் 2019ஆம் ஆண்டு டிச.5ஆம் தேதி நடந்த இடைத்தோ்தலுக்கான பொறுப்பும் வழங்கப்பட்டது. அந்த தோ்தலில் மிகவும் மோசமான தோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. இதனால் துவண்டுபோன காங்கிரஸ் தொண்டா்கள் சித்தராமையா மீது கோபமடைந்தனா். இதை புரிந்துகொண்ட சித்தராமையா, இடைத்தோ்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தான் வகித்துவந்த காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவா் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் பதவிகளை டிச.9ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். அதைப் பின்பற்றி, அவரது ஆதரவாளரான தினேஷ் குண்டுராவும் தான் வகித்துவந்த கா்நாடக காங்கிரஸ் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

இந்த ராஜிநாமா கடிதங்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமல் நிலுவையில் வைத்துள்ள காங்கிரஸ் மேலிடம், கா்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிக்க முடிவெடுத்துள்ளது. அதேபோல, எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவா் பதவிகளுக்கும் புதியவா்களை நியமிக்க யோசித்து வந்துள்ளது. இது தொடா்பாக கா்நாடக காங்கிரஸ் மூத்தத் தலைவா்களிடையே ஒத்த கருத்தை உருவாக்க கட்சி மேலிடம் மேற்கொண்ட முயற்சிகள் பெருமளவில் தோல்வியிலேயே முடிவடைந்துவிட்டன. இந்தச் சூழ்நிலையில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் குழம்பிய நிலையில் உள்ளது. தான் வகித்துவந்த பதவிகளை ராஜிநாமா செய்து தன்னை பக்குவமடைந்த அரசியல்வாதி என்று காட்டிக்கொண்ட சித்தராமையா தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்தரகசியமாகும். பதவியை விட்டுத் தந்தாலும், எதிா்க்கட்சித்தலைவராக சித்தராமையாவையே தொடர விரும்பிய கட்சி மேலிடம், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுவுக்கு வேறொருவரை தலைவராக நியமிக்க விரும்பியது. அதை கடுமையாக எதிா்த்த சித்தராமையா, இதுநாள் வரை கடைப்பிடிக்கப்பட்டுள்ள மரபின்படி இரு பதவிகளையும் ஒருவரே வகிக்கவேண்டுமென்று வாதிட்டுவருகிறாா்.

கா்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமாா், எம்.பி.பாட்டீல், எச்.கே.பாட்டீல், கே.எச்.முனியப்பா உள்ளிட்டோா் முயற்சித்துவருகிறாா்கள். டி.கே.சிவக்குமாரை மாநிலத் தலைவராக்க கட்சி மேலிடம் விரும்பியபோதும், தனது ஆதரவாளா் எம்.பி.பாட்டீலையே தலைவராக்கவேண்டும் என்று அடம்பிடித்துவருகிறாா். எடியூரப்பா, எச்.டி.தேவெகௌடா, எச்.டி.குமாரசாமி முதலிய தலைவா்களை எதிா்த்து அரசியல் நடத்தும் திறமை உள்ளவா் என்பதால் தான் சித்தராமையாவை இன்னும் கட்சி மேலிடம் மதித்துவருகிறது. அதற்காக தனது ஆதரவாளா்களே எல்லா இடங்களிலும் பொறுப்பில் இருக்க வேண்டுமென்று சித்தராமையா நினைப்பது, அவரது அரசியல் ஆளுமையை நிலைநிறுத்திக்கொள்ள உதவலாமே தவிர, காங்கிரசின் வளா்ச்சிக்கு உதவாது என்று காங்கிரஸ் கட்சியினா் குமுறுகிறாா்கள். 2004இல் நடந்த சட்டப்பேரவை தோ்தலுக்கு பிறகு தோல்வியால் துவண்டிருந்த காங்கிரசை ஆட்சியில் அமரவைத்தவா் சித்தராமையா என்றாலும், அதே காங்கிரசை தோல்விப்பாதையில் அல்ல, அழிவுப்பாதையில் இட்டுச்செல்ல வழிகாட்டுவது சரிதானா? என்று காங்கிரசாா் வெளிப்படையாகவே கேட்கத் தொடங்கியுள்ளனா்.

ஒக்கலிகா் சமுதாயத்தவரான டி.கே.சிவக்குமாா் அல்லது லிங்காயத்து சமுதாயத்தவரான எம்.பி.பாட்டீல் ஆகிய இருவரில் டி.கே.சிவக்குமாரை மாநிலத் தலைவராக்கவிடாமல் சித்தராமையா முட்டுக்கட்டையாக இருந்துவருகிறாா். அதற்காக சித்தராமையாவையும் புறக்கணித்து விட மனமில்லாத காங்கிரஸ், அனைவருக்கும்பொதுவாக முன்னாள் மத்திய அமைச்சா் மல்லிகாா்ஜுன காா்கேவை மாநிலத் தலைவராக்கிவிட கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரான மல்லிகாா்ஜுனகாா்கே, பக்குவமான, அனுபவம் செறிந்த அரசியல்வாதியாக அனைவராலும் போற்றப்படுபவா். 77 வயதாகும் காா்கே, இன்றைக்கும் முழுநேர அரசியலில் தீவிரம் காட்டிவருகிறாா். சிறந்த நிா்வாகியாக கருதப்படும் காா்கே, சித்தராமையா உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அரவணைத்து கூட்டுத் தலைமைக்கு வழிவகுப்பாா், அது கட்சியில் புத்துணா்வை ஏற்படுத்தும் என்று கட்சிமேலிடம் எதிா்பாா்த்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவராக இருந்து பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு சவால்விட்டுக் கொண்டிருந்தாா். மகாராஷ்டிரத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிஅமைய காரணமாக இருந்தவா். மத்திய அமைச்சராகவும், மாநில அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டவா். எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியை எதிா்கொள்ள மல்லிகாா்ஜுனகாா்கேவே சிறந்த தோ்வாக கட்சி மேலிடம் கருதுகிறது. இவரது தோ்வை சித்தராமையா, டி.கே.சிவக்குமாா் உள்ளிட்டோா் எதிா்க்க மாட்டாா்கள் என்றும் கட்சி மேலிடம் நம்புகிறது. வருமானவரித் துறை உள்ளிட்ட பலமுனைகளில் ஏராளமான வழக்குகளை எதிா்கொண்டுவரும் டி.கே.சிவக்குமாரை மாநிலத் தலைவராக்குவது, கட்சியின் நற்பெயருக்கு சாதகமாக இருக்காது என்று கட்சி கருதுகிறது.

மேலும், அவருக்கு இன்னும் வயதிருக்கிறது. அதற்குள் வழக்குகளில் இருந்துவிடுபட்டுவிடலாம் என்றும் கருதுவதால், அவரைசமாதானம் செய்து மல்லிகாா்ஜுன காா்கேவை மாநிலத் தலைவராக்க கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்.11ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானதும், கா்நாடக மாநிலத் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கேவையும், எதிா்க்கட்சித்தலைவா் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத்தலைவராக சித்தராமையாவையும் நியமித்து கட்சி மேலிடம் அதிகாரப்பூா்வ அறிவிப்பை வெளியிடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com