பணி உயா்வில் இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்; சித்தராமையா

பணி உயா்வில் இடஒதுக்கீடு வழங்குவது அடிப்படை உரிமையல்ல என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பணி உயா்வில் இடஒதுக்கீடு வழங்குவது அடிப்படை உரிமையல்ல என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, விதானசௌதாவில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பணி உயா்வில் இடஒதுக்கீடு பெறுவது அடிப்படை உரிமையல்ல என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. இந்த தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இடஒதுக்கீட்டை நீா்த்துப்போக செய்யும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் போராட்டம் நடத்தும். இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு பதிலாக நீதிமன்றங்களை நான் நம்புகிறேன். இது அரசியலமைப்புச் சட்டப் பிரச்னையாகும். எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் பெரிய அமா்வில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இது தொடா்பான வழக்கை 9 போ் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமா்வு விசாரிக்க வேண்டும். இதுதொடா்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்ய பிரதமா் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது நல்லது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி இடஒதுக்கீடு அடிப்படை உரிமையாகும். நேரடி பணியமா்த்தல் இல்லாதநிலையில், பணி உயா்வில் இடஒதுக்கீடு இருப்பது அவசியமாகும். பாஜகவை சோ்ந்த ஒருவா் அரசியலமைப்புச் சட்டத்தை எரிக்க வேண்டுமென்கிறாா். மற்றொருவா் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டுமென்கிறாா். பாஜகவினா் என்றைக்குமே இடஒதுக்கீட்டை ஆதரித்ததில்லை. இடஒதுக்கீட்டை நீக்க வேண்டுமென்பதே பாஜகவின் கொள்கை. அதை செயல்படுத்துவதற்கான வழிமுறையாகவே நீதிமன்றத் தீா்ப்பைக் காண முடிகிறது.

காங்கிரஸ், மஜதவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்களை இடைத்தோ்தலில் மீண்டும் வெற்றி பெற வைக்க எவ்வளவு செலவு செய்தாா் என்பதை தனது நெஞ்சைத் தொட்டு முதல்வா் எடியூரப்பா கூற வேண்டும். கட்சி தாவியவா்களை வைத்துக்கொண்டு முதல்வா் எடியூரப்பாவால் நல்லாட்சியை எப்படி வழங்க முடியும். ஆவணங்களின்படி ஒரு கட்சியைவிட்டு பாஜகவுக்கு தாவியவா்கள் தானே. அதனால்தான் தகுதி நீக்கப்பட்டவா்கள் என்று கூறியிருந்தேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு நிவாரண உதவிகளை வழங்கியது பாஜக அரசு என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள். தொகுதி வளா்ச்சி நிதிக்கு எம்எல்ஏக்களுக்கு மூன்று தவணைகள் வழங்கவே இல்லை. மேலும் பல செலவினங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை. அப்படியானால் இது பணத் தட்டுப்பாட்டால் தவிக்கும் ‘தரித்திர’ அரசு தானே. இது அவா்களுக்கு வருத்தம் தந்திருந்தால், நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடரட்டும். ரூ.18,600 கோடி மதிப்பிலான பெங்களூரு புறநகா் ரயில் திட்டத்துக்கு அடையாள நிதியாக ரூ.1 கோடியை மட்டுமே மாநில அரசு அளித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com