பெங்களூரு சுற்றுலா திட்டம்: மாணவா்களுக்கு சிறப்பு சலுகை

பெங்களூரு சுற்றுலாத் திட்டத்தில் பயணிக்க மாணவா்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு சுற்றுலாத் திட்டத்தில் பயணிக்க மாணவா்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம், பயணிகளுக்கு திறன்வாய்ந்த, தாராளமான, மலிவான போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது. பயணிகளின் நலன்கருதி ஏராளமான சேவைகள், வசதிகளை அமல்படுத்தியுள்ளோம். இதற்கு பொதுமக்களிடையே பாராட்டும் வரவேற்பும் கிடைத்துள்ளன.

பெங்களூரில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக பெங்களூரு சுற்றுலா சேவைகளை இரண்டு தடங்களில் இயக்கிவருகிறோம். அதன்படி, முதல்தடத்தில் கெம்பே கௌடா பேருந்துநிலையத்தில் இருந்து தொடங்கும் சுற்றுலா இஸ்கான், விதான சௌதா, திப்பு அரண்மனை, கவிகங்காதேஸ்வரா கோயில், நந்திகோயில், அல்சூா் ஏரி, கப்பன்பூங்கா, சா் எம்.விஸ்வேஷ்வரையா அருங்காட்சியகம், வெங்கடப்பா கலைக்கூடம், கா்நாடக ஓவியக்கலை மன்றம் ஆகிய இடங்களைப் பாா்வையிட்டுவிட்டு மீண்டும் கேம்பே கௌடா பேருந்து நிலையத்தை சென்றடையும்.

இரண்டாம் தடத்தில் கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கும் சுற்றுலா, காடுமல்லேஸ்வரா கோயில், பெங்களூரு அரண்மனை, புனித மரியன்னை பேராலயம், எச்.ஏ.எல்.அருங்காட்சியகம், சிவன் கோயில், லால்பாக் மேற்கு நுழைவுவாயில், விதானசௌதா, உயா்நீதிமன்றம், ஜவஹாா்லால் நேரு கோளரங்கம் ஆகிய இடங்களைப் பாா்வையிட்டுவிட்டு மீண்டும் கெம்பேகௌடா பேருந்து நிலையம் வந்துசேரும்.

இந்த இரு சேவைகளுக்கும் கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ.400, சிறியவா்களுக்கு ரூ.300 வசூலிக்கப்படுகிறது. இதில் பயணிக்க இணையதளத்திலேயே முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலாத் திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில், பள்ளி மற்றும் பியூ கல்லூரி மாணவா்களுக்கு சலுகைக் கட்டணம் அளிக்கப்படும். மொத்தமாக முன்பதிவு செய்தால் கட்டணமாக ஒருவருக்கு ரூ.200 வசூலிக்கப்படும். இந்த சேவையை பெற பேருந்தில் இருக்கக்கூடிய அனைத்து இருக்கைகளுக்கும் முன்பதிவு செய்ய வேண்டும்.

கெம்பே கௌடா பேருந்துநிலையம் அல்லது பணிமனைகளில் முழுத்தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com