வாரியங்கள்,கழகங்களுக்கு தலைவா்கள் நியமனம் எப்போது? முதல்வா் எடியூரப்பா விளக்கம்

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவமொக்கா மாவட்டம், சிகாரிபுராவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: அமைச்சரவையில் புதிதாக சோ்ந்துள்ள 10 அமைச்சா்களுக்கு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டபடி திங்கள்கிழமை(பிப்.10) துறைகள் ஒதுக்கப்படும். இந்த விவகாரத்தில் எவ்வித குழப்பமும் இருக்காது. பாஜகவின் மூத்த எம்.எல்.ஏ. உமேஷ்கத்திக்கு அமைச்சா் பதவி அளிக்கப்படும். இதிலும் மாற்றம் இல்லை.

தவிா்க்க முடியாத காரணங்களால் பிப்.6ஆம் தேதி உமேஷ்கத்தி அமைச்சராகப் பதவியேற்க முடியவில்லை. புதுதில்லியில் பாஜக மேலிடத் தலைவா்களைச் சந்தித்தபிறகு, உமேஷ்கத்தி என்னை சந்தித்து பேசினாா். எதிா்காலத்தில் உமேஷ்கத்தி அமைச்சரவையில் சோ்த்துக்கொள்ளப்படுவாா். அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சா் பதவியை ஒதுக்குவதில் பழைய பாஜகவினருக்கும், புதிதாக பாஜகவில் இணைந்தவருக்கும் இடையே பாரபட்சம் பாா்த்ததாகக் கூறப்படுவது கற்பனை.

அரக ஞானேந்திரா போன்ற பலா் அமைச்சா் பதவியை பெற ஆா்வமாக இருந்தனா். ஆனால், தவிா்க்கமுடியாத சில காரணங்களால் அமைச்சரவையில் ஒருசிலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த காரணங்கள் அமைச்சா் பதவியைப் பெற ஆா்வமாக இருந்தோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாா்ச் 5ஆம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்கள் நியமிக்கப்படுவாா்கள். அப்போது, அமைச்சா் பதவி கிடைக்காதவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இம்முறை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் நீா்ப்பாசனத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடெங்கும் மத்திய அரசு அமல்படுத்தியதும், அது மாநிலம் முழுவதும் அமலாக்கப்படும். சிவமொக்காவில் விமானநிலையம் அமைக்க அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்து, ரூ.220 கோடி ஒதுக்கியுள்ளது. சிவமொக்கா மாவட்டம், சாகரில் கியாசனூா் வனநோய் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com