‘ஏரிகள் பாதுகாப்பில் குழந்தைகளின் பங்களிப்பு மிகவும் அவசியம்’

ஏரிகள் பாதுகாப்பில் குழந்தைகளின் பங்களிப்பு மிகவும் அவசியம் என நம்ம பெங்களூரு அறக்கட்டளை பொதுமேலாளா் ஹரீஷ்குமாா் தெரிவித்தாா்.

ஏரிகள் பாதுகாப்பில் குழந்தைகளின் பங்களிப்பு மிகவும் அவசியம் என நம்ம பெங்களூரு அறக்கட்டளை பொதுமேலாளா் ஹரீஷ்குமாா் தெரிவித்தாா்.

நம்ம பெங்களூரு அறக்கட்டளையின் சாா்பில், பெங்களூரில் உள்ள ஜோகி ஏரியில் வெள்ளிக்கிழமை ஏரிக்கரை திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிகள், கல்லூரிகளின் மாணவா்களுக்காக ஏரி நடைப்பயிற்சி, ஓவியப் போட்டி, மரக்கன்று நடுதல், கட்டுரைப் போட்டி, விநாடி-வினா போன்றவை நடத்தப்பட்டன.

இந்த விழாவை தொடக்கி வைத்து நம்ம பெங்களூரு அறக்கட்டளை பொதுமேலாளா் ஹரீஷ்குமாா் பேசியது: பெங்களூரு மக்களின் நீா் ஆதார உயிா்நாடியாக இருந்த ஏரிகள், தற்போது குப்பைக் கூடங்களாக, நச்சு வேதிப்பொருள்களின் கழிவுநீா் கால்வாயாக மாறியுள்ளன. மேலும், பல ஏரிகள் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டன. சரியான பராமரிப்பு இல்லாததால் பல ஏரிகள் அழிந்துபோயுள்ளன.

இந்த நிலையை மாற்றும் நோக்கில், ஏரி பாதுகாப்பில் மக்களை ஈடுபடுத்துவதற்காக ஏரிக்கரை திருவிழா நடத்த தொடங்கியுள்ளோம். இது நாங்கள் நடத்தும் முதல் திருவிழா. நிகழாண்டில் 10 ஏரிக்கரை திருவிழாக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஏரிகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதே இந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாகும். ஏரிகளின் பாதுகாப்பில் குழந்தைகளின் பங்களிப்பு அவசியமாகும். ஏரிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளிடம் விதைத்துவிட்டால், அது அடுத்த தலைமுறைக்கும் ஏரிகளை பாதுகாக்க உதவும்.

ஏரிகளின் முக்கியத்துவம், பாரம்பரியம் குறித்து குழந்தைகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த முனைந்துள்ளோம். இதன் வாயிலாக பெங்களூரில் அழிந்த நிலையில் உள்ள ஏரிகளை புதுப்பிக்க திட்டமிட்டிருக்கிறோம். ஏரிகளை சீராக பராமரிக்க தவறினால், அது பொதுமக்களின் சுகாதாரத்தை எவ்வகையில் பாதிக்கிறது என்பதையும் குழந்தைகளிடம் எடுத்துக் கூறுகிறோம். ஏரிகள் பாதுகாப்பில் பொதுமக்கள் மட்டுமல்லாது, குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் ஈடுபட வேண்டும். சுற்றுச்சூழலின் முக்கியமான சொத்தாக விளங்கும் ஏரியை பாதுகாப்பதில் குழந்தைகளின் ஈடுபாடு இத்திருவிழாவின் மூலம் பெருகும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

விழாவில், பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com