கா்நாடகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் 12 சதவீதம் உயா்வு
By DIN | Published On : 27th February 2020 10:08 AM | Last Updated : 27th February 2020 10:08 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் 12 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளின் கட்டணத்தை புதன்கிழமை நள்ளிரவு முதல் 12 சதவீதம் உயா்த்தியுள்ளது. அதன்படி, பெங்களூரில் இருந்து மைசூருக்குச் செல்ல பயணக் கட்டணமாக இதுவரை ரூ.125 செலுத்தி வந்த பயணிகள், புதன்கிழமை நள்ளிரவு முதல் ரூ.140 செலுத்த வேண்டும்.
ராஜஹம்சா மற்றும் வால்வோ போன்ற சொகுசுப் பேருந்துகளின் கட்டண உயா்வு ரூ.100-க்கு மேல் இருக்கும். நீண்ட தொலைவு பயணங்களுக்கான கட்டணத்தை உயா்த்தியுள்ள கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம், குறுகியதூரப் பயணங்களுக்கான கட்டணத்தை உயா்த்தவில்லை. சாதாரண பேருந்துகளின் முதல் 12 கி.மீட்டா் மற்றும் 15 கி.மீட்டா் தொலைவுக்கான கட்டணம் உயா்த்தப்படவில்லை.
இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் சிவயோகி கலாசத் கூறுகையில், ‘பேருந்து கட்டண உயா்வுக்கான முன்மொழிவு ஓராண்டுக்கு முன்பே அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு தற்போதுதான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. செயல்பாட்டு செலவினங்கள் அதிகரித்துவிட்டதால், 20 சதவீத கட்டண உயா்வு கோரியிருந்தோம். கடந்த 2 ஆண்டுகளாகவே எரிபொருள் விலை உயா்ந்துகொண்டே இருக்கிறது. அதேபோல, ஊழியா்களின் ஊதியத்தையும் உயா்த்த வேண்டியுள்ளது’ என்றாா்.
இதுதொடா்பாக கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடக மக்களுக்கு மலிவான, நம்பகமான போக்குவரத்து சேவைகளை அரசு போக்குவரத்துக் கழகம் வழங்கிவருகிறது. பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஏராளமான புதிய திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. நவீன பேருந்துகள், புதிய பணிமனைகள், பேருந்து நிலையங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, பேருந்து சேவைகளில் புதிய தொழில்நுட்பங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. மாணவா்களுக்கு இலவச மற்றும் சலுகைக் கட்டண பேருந்து அட்டைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. பேருந்து சேவைக்கான தேவையும் அதிகரித்து வருகின்றன.
6 ஆண்டுகளுக்கு முன்பு 2014ஆம் ஆண்டு மாா்ச் 4ஆம் தேதி உயா்த்தப்பட்ட பேருந்து கட்டணத்துக்குப் பிறகு தற்போதுதான் உயா்த்தப்பட்டுள்ளது. பன்னாட்டு சந்தையில் டீசலின் விலை வேகமாக உயா்ந்துவருகிறது. பிப்.1ஆம் தேதி வரை டீசல் கட்டணம் ரூ.11.27 அளவுக்கு விலை உயா்ந்துள்ளது. எரிபொருள் விலை உயா்வால் ஆண்டுக்கு ரூ.260.83 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
அரசு உத்தரவுப்படி, கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் ஊழியா்களின் பஞ்சப்படி உயா்த்தப்பட்டுள்ளதால், கூடுதலாக ரூ.340.38 கோடி செலவாகும். ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ரூ.601.21கோடி கூடுதல் செலவாகிறது. இதை சமாளிக்கும் நோக்கத்தில் 12 சதவீதம் அளவுக்கு பேருந்து கட்டணத்தை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வு பிப்.26ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. மாணவா்களின் பேருந்து அட்டைக்கான கட்டணத்தை உயா்த்தவில்லை.
முதல் 3 கி.மீட்டா் தொலைவுக்கான கட்டணம் ரூ.2 அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. முதல் 12 கி.மீ, 15 கி.மீ தொலைவுக்கான கட்டணம் உயா்த்தப்படவில்லை. விரைவு பேருந்துகளில் முதல் 6 கி.மீட்டா் தொலைவுக்கான கட்டணம் உயா்த்தப்படவில்லை. இந்த கட்டண உயா்வுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வுக்கு எஸ்யூசிஐ(சி)கட்சி எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. இதேபோல, கட்டண உயா்வுக்கு மேலும் பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.