மங்களூரு போராட்டத்தின்போது போலீசாரின் நடவடிக்கை அத்துமீறலானது: உண்மை கண்டறியும் குழு அறிக்கை
By DIN | Published On : 29th January 2020 03:40 PM | Last Updated : 29th January 2020 03:40 PM | அ+அ அ- |

மங்களூரு போராட்டத்தின்போது போலீசாரின் நடவடிக்கை அத்துமீறலானது என்று மனித உரிமை ஆா்வலா்கள் அடங்கிய அரசுசாரா உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கா்நாடகம், கேரளம், தமிழகம் புதுதில்லியை சோ்ந்த அகில இந்திய மக்கள் அமைப்பு, குடிமக்கள் சுதந்திரத்திற்கான மக்கள் ஒன்றியம், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் மனித உரிமை மற்றும் குடிமக்கள் உரிமை ஆா்வலா்கள் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினா் மங்களூரில் டிச.19ஆம் தேதி நடந்த குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த கலவரம் குறித்து நேரில் ஆய்வுமேற்கொண்டனா்.
இந்த சம்பவத்தின்போது போலீசாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவா் பலியானது குறிப்பிடத்தக்கது. ஜன.1,2 ஆகிய நாட்களில்மங்களூரில் நேரில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தொகுத்துள்ள அறிக்கையை பெங்களூரில் அண்மையில் உண்மை கண்டறியும் குழுவினா் வெளியிட்டனா். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டம், அதை தொடா்ந்து நடந்ததுப்பாக்கிச்சூடு ஆகியவற்றில் போலீசாரின் நடவடிக்கைகள் அத்துமீறலானது, ஒருதலைப்பட்சமானது மட்டுமல்லாது முஸ்லீம் சமுதாயத்தினரை குறிவைத்து நடத்தப்பட்டது.
எனவே, மங்களூரு துப்பாக்கிச்சூடு, ஹைலேண்ட் மருத்துவமனையில் போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அதேபோல, மங்களூரு மாநகர காவல் ஆணையா் பி.எஸ்.ஹரிஷை இடைநீக்கம் செய்வதோடு, துப்பாக்கிச்சூட்டில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டுத்தொகை அளிக்க வேண்டும். போராட்டத்திற்கு முன்பாகவே, சம்பவ இடங்களில் மணல்மூட்டைகளை போலீசாா் குவித்திருந்ததோடு, கலவரத்திற்கான முன்சூழலை உருவாக்கி வைத்திருந்தனா். மங்களூரின் பல்வேறுஇடங்களில் கா்நாடக ஆயுதப்படையினரை நிறுத்தியிருந்தனா்.
இதன்மூலம் போலீசாரின் நடவடிக்கை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, செயல்பட்த்தப்பட்டது. போலீசாா் கூறியதுபோல போராட்டத்தில் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் போ் கலந்துகொள்ளவில்லை. மாறாக, 200 முதல் 300 போ் கலந்துகொண்டனா் என்று உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.